டெங்கு, பன்றிக்காய்ச்சல் பாதிப்பு: அரசு ஆஸ்பத்திரியில் சிறப்பு டாக்டர்கள் குழு அமைப்பு
டெங்கு, பன்றிக்காய்ச்சலால் பாதிக்கப்பட்டவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்க கோவை அரசு ஆஸ்பத்திரியில் சிறப்பு டாக்டர்கள் குழு அமைக்கப்பட்டு உள்ளதாக டீன் டாக்டர் அசோகன் தெரிவித்தார்.;
கோவை,
கோவை மாவட்டத்தில் கடந்த ஆண்டு டெங்கு மற்றும் பன்றிக்காய்ச்சல் வேகமாக பரவியது. இதனால் பாதிக்கப்பட்ட சிலர் இறந்தனர். எனவே டெங்கு காய்ச்சலை தடுக்க மாவட்ட சுகாதாரத்துறை சார்பில் கிருமி நாசினி மருந்து தெளித்தல் உள்ளிட்ட பல்வேறு தடுப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன. இதனால் டெங்கு பாதிப்பு குறைந்தது.
இந்தநிலையில் கோவை மாவட்டத்தில் கடந்த சில நாட்களுக்கு முன்பு கனமழை பெய்தது. இதன்காரணமாக கோவை மாவட்டத்தில் தற்போது மீண்டும் டெங்கு காய்ச்சல், பன்றிக்காய்ச்சல், வைரஸ் காய்ச்சல் பரவ தொடங்கி உள்ளது.
இதுகுறித்து அரசு ஆஸ்பத்திரி டீன் டாக்டர் அசோகன் கூறியதாவது:-
டெங்கு, பன்றிக்காய்ச்சல், வைரஸ் காய்ச்சல்களால் பாதிக்கப்பட்ட பலர் கோவை அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டு வருகின்றனர். எனவே இவர்களை 24 மணி நேரமும் கண்காணிப்பதற்காக 18 பேர் கொண்ட சிறப்பு டாக்டர்கள் குழுவினர் அமைக்கப்பட்டு உள்ளனர். இவர்கள் 3 பிரிவுகளாக பணிக்கு வந்து டெங்கு, பன்றிக்காய்ச்சலால் பாதிக்கப்பட்டவர்களுக்கு தீவிர சிகிச்சை அளித்து வருகின்றனர்.
இந்த ஆண்டில் டெங்கு காய்ச்சலின் தாக்கம் குறைந்து உள்ளது. அதே நேரத்தில் பன்றிக்காய்ச்சலின் தாக்கம் அதிகரித்து உள்ளது. தற்போது கோவை அரசு ஆஸ்பத்திரியில் டெங்கு காய்ச்சலுக்கு 2 பேரும், பன்றிக்காய்ச்சலுக்கு 4 பேரும், பன்றிக்காய்ச்சல் அறிகுறியுடன் 12 பேரும், வைரஸ் காய்ச்சலுக்கு 61 பேரும் என மொத்தம் 79 பேர் அனுமதிக்கப்பட்டு உள்ளனர். அவர்களுக்கு தனிவார்டில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. மேலும் கடுமையான காய்ச்சலால் பாதிக்கப்பட்டு வருபவர்களுக்கு டெங்கு, பன்றிக்காய்ச்சல் பரிசோதனை செய்யப்பட அறிவுறுத்தப்பட்டு உள்ளது.
இவ்வாறு அவர் கூறினார்.