மறியலில் ஈடுபட்ட சத்துணவு ஊழியர்கள் 254 பேர் கைது

சாலை மறியலில் ஈடுபட்ட சத்துணவு ஊழியர்கள் 254 பேரை போலீசார் கைது செய்தனர்.

Update: 2018-10-29 23:00 GMT
கரூர்,
சத்துணவு ஊழியர்களுக்கு காலமுறை ஊதியம் வழங்க வேண்டும். ஓய்வு பெறும் சத்துணவு அமைப்பாளர்களுக்கு ஒட்டுமொத்த தொகை ரூ.5 லட்சமும், சமையல் மற்றும் சமையல் உதவியாளர்களுக்கு ரூ.3 லட்சமும் வழங்கிட வேண்டும். காலிப்பணியிடங்களை விரைவில் நிரப்ப வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி கரூர் மாவட்ட சத்துணவு ஊழியர் சங்கம் சார்பில் கடந்த 25-ந் தேதி முதல் கலெக்டர் அலுவலகம் முன்பு சத்துணவு ஊழியர்கள் தொடர் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். எனினும் கோரிக்கைகளை நிறைவேற்றி தருவது குறித்து அரசிடம் இருந்து உரிய பதில் வராததால் 29-ந் தேதி சாலை மறியல் போராட்டம் நடத்தப்படும் என அறிவித்தனர். அதன்பேரில் கரூர் மாவட்ட தலைவர் ராஜேந்திரன் தலைமையில் சமையலர், உதவியாளர், சத்துணவு அமைப்பாளர் உள்ளிட்டோர் நேற்று காலை கரூர் தாலுகா அலுவலகம் முன்பு திரண்டனர். பின்னர் அவர்கள் கோரிக்கைகளை வலியுறுத்தி ஜவகர்பஜார் பிரதான சாலையில் மறியலில் ஈடுபட்டனர்.

அப்போது காலமுறை ஊதியம் வழங்கப்படாததால் தங்களுக்கு ஏற்படும் பாதிப்புகள் குறித்து எடுத்துரைத்து தமிழக அரசை கண்டித்து கோஷம் எழுப்பினர். அனுமதியின்றி மறியல் போராட்டத்தில் ஈடுபட்டதாக கூறி, மாநில செயலாளர் மலர்விழி, மாவட்ட செயலாளர் சுந்தரம், அரசு ஊழியர் சங்க மாநில துணை தலைவர் சுப்ரமணியன், மாவட்ட தலைவர் சக்திவேல் உள்பட சத்துணவு ஊழியர் சங்கத்தினர் 254 பேரை போலீசார் கைது செய்தனர். இதில் 237 பேர் பெண்கள், 17 பேர் ஆண்கள் என்பது குறிப்பிடத்தக்கது. கைது செய்யப்பட்டவர்களை கரூரில் உள்ள ஒரு மண்டபத்தில் தங்க வைக்கப்பட்டு மாலையில் விடுவிக்கப்பட்டனர். இந்த போராட்டம் தொடர்பாக சத்துணவு ஊழியர் சங்க நிர்வாகிகள் தெரிவிக்கையில், கோரிக்கைகள் ஏற்கப்படாததால் சமையல் கூடங்களை அடைத்து விட்டு 800-க்கும் மேற்பட்ட சத்துணவு ஊழியர்கள் பணிக்கு செல்லவில்லை. தொடர்ந்து எங்களை புறக்கணிக்கும் விதமாக அரசு செயல்பட்டால் போராட்டத்தை மேலும் தீவிரப்படுத்துவோம் என்று தெரிவித்தனர்.

மேலும் செய்திகள்