சொத்துவரி உயர்வை கண்டித்து: மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியினர் ஆர்ப்பாட்டம்

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி சார்பில் சொத்துவரி உயர்வை கண்டித்து தேனி அல்லிநகரம், கம்பம், போடியில் ஆர்ப்பாட்டம் நடந்தது.

Update: 2018-10-29 21:30 GMT
தேனி,

தேனி அல்லிநகரம் நகராட்சி அலுவலகம் முன்பு சொத்து வரி உயர்வு, குடிநீர் கட்டணம், பெயர் மாற்றுக் கட்டணம், பிறப்பு, இறப்பு சான்றிதழ் கட்டணம் உயர்வை கண்டித்தும், உள்ளாட்சித் தேர்தலை உடனே நடத்த வலியுறுத்தியும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது. இந்த ஆர்ப்பாட்டத்துக்கு தாலுகா செயலாளர் சடையாண்டி தலைமை தாங்கினார். இதில் முன்னாள் எம்.எல்.ஏ. லாசர், மாவட்ட செயலாளர் வெங்கடேசன், மாவட்ட செயற்குழு உறுப்பினர் சங்கரசுப்பு மற்றும் நிர்வாகிகள் பலர் கலந்துகொண்டனர். கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பினர்.

கம்பம் நகராட்சி, பேரூராட்சிக்குட்பட்ட பகுதிகளில் உள்ள கடைகள், அலுவலகங்கள், தங்கும்விடுதிகள், குடியிருப்புகளுக்கு 50 சதவீதம் முதல் 100 சதவீதம் வரை சொத்து வரி மற்றும் குடிநீர் கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளது. இதேபோல் பெயர் மாற்றுக்கட்டணம், பிறப்பு-இறப்பு சான்றிதழ் கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளது. இதை கண்டித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி சார்பில் கம்பம் நகராட்சி அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

இந்த ஆர்ப்பாட்டத்திற்கு நகரகுழு உறுப்பினர் சின்னராஜ் தலைமை தாங்கினார். மாவட்ட செயலாளர் வெங்கடேசன், நகர செயலாளர் நாகராஜன் மற்றும் மாவட்டக்குழு உறுப்பினர்கள், கிளை செயலாளர்கள் ஆகியோர் கலந்து கொண்டு பேசினார்கள். ஆர்ப்பாட்டத்தின் போது சொத்து வரி உயர்வு மற்றும் குடிநீர் கட்டண உயர்வை கண்டித்தும், உள்ளாட்சி தேர்தலை உடனே நடத்திட வலியுறுத்தியும் கோஷங்கள் எழுப்பப்பட்டது. இதில் கட்சி நிர்வாகிகள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

போடி நகராட்சி அலுவலகம் முன்பு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி சார்பில் கோரிக்கைகளை வலியுறுத்தி கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதற்கு தாலுகா செயலாளர் எஸ்.செல்வம் தலைமை தாங்கினார். மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் கே.ராஜப்பன், எஸ்.கே.பாண்டியன் ஆகியோர் பங்கேற்று கோரிக்கைகளை வலியுறுத்தி பேசினர். பின்னர் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியினர் போடி நகராட்சி, மேலசொக்கநாதபுரம் பேரூராட்சி, மீனாட்சிபுரம் பேரூராட்சி அலுவலகங்களில் கோரிக்கை மனு அளித்தனர்.

இதேபோல் மாவட்டத்தில் உள்ள பிற நகராட்சி, பேரூராட்சி அலுவலகங்கள் முன்பும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியினர் ஆர்ப்பாட்டம் செய்தனர்.

மேலும் செய்திகள்