கனரா வங்கியில் 800 புரபெசனரி அதிகாரி வேலை

கனரா வங்கியில் புரபெசனரி அதிகாரி பணிக்கு 800 பேர் தேர்வு செய்யப்படுகிறார்கள்.

Update: 2018-10-29 09:42 GMT
பொதுத்துறை வங்கிகளில் ஒன்று கனரா வங்கி. முன்னணி வங்கியான இதில் தற்போது புரபெசனரி அதிகாரி பணியிடங்களை நிரப்ப விண்ணப்பம் கோரப்பட்டு உள்ளது. மொத்தம் 800 பேர் தேர்வு செய்யப்படுகிறார்கள். இடஒதுக்கீடு அடிப்படையில் பொதுப் பிரிவுக்கு 404 இடங்களும், ஓ.பி.சி பிரிவினருக்கு 216 இடங்களும், எஸ்.சி. பிரிவினருக்கு 120 இடங்களும், எஸ்.டி. பிரிவினருக்கு 60 இடங்களும் உள்ளன.

எழுத்துத் தேர்வின் அடிப்படையில் குறிப்பிட்ட எண்ணிக்கையில் விண்ணப்பதாரர்கள் தேர்வு செய்யப்பட்டு, அவர்களுக்கு வங்கி-நிதி பணிகள் சார்ந்த டிப்ளமோ பயிற்சி அளிக்கப்பட்டு பணி வழங்கப்படும்.

இந்த தேர்வுக்கு விண்ணப்பிக்க விரும்புபவர்கள் பெற்றிருக்க வேண்டிய தகுதி விவரங்களை இனி பார்ப்போம்...

வயது வரம்பு

விண்ணப்பதாரர்கள் 1-10-2018-ந் தேதியில் 20 முதல் 30 வயதுக்கு உட்பட்டவர்களாக இருக்க வேண்டும். அதாவது 2-10-1988 மற்றும் 1-10-1998 ஆகிய தேதிகளுக்கு இடைப்பட்ட காலத்தில் விண்ணப்பதாரர் பிறந்திருக்க வேண்டும். அரசு விதிகளின்படி குறிப்பிட்ட பிரிவினருக்கு வயது வரம்பில் தளர்வு அனுமதிக்கப்படும்.

கல்வித்தகுதி

ஏதேனும் ஒரு பிரிவில் பட்டப்படிப்பை 60 சதவீத மதிப்பெண்களுடன் தேர்ச்சி பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம். எஸ்.சி., எஸ்.டி. பிரிவினர் மற்றும் மாற்றுத்திறனாளிகள் 55 சதவீத மதிப்பெண் பெற்றிருந்தால் போதுமானது.

கட்டணம்

பொது மற்றும் ஓ.பி.சி. பிரிவினர் ரூ.708 (ஜி.எஸ்.டி சேர்த்து) கட்டணம் செலுத்தி விண்ணப்பிக்க வேண்டும். எஸ்.சி., எஸ்.டி. பிரிவினர் மற்றும் மாற்றுத்திறனாளிகள் ரூ.118 செலுத்தி விண்ணப்பித்தால் போதுமானது.

தேர்வு செய்யும் முறை

ஆன்லைன் தேர்வு மூலம் விண்ணப்பதாரர்கள் தேர்வு செய்யப்படுவார்கள். அவர்களுக்கு மணிப்பால் குளோபல் எஜுகேசன் சர்வீசஸ் மையத்தின் பெங்களூரு கிளையில் வங்கிநிதிப் பணிகளுக்கான 9 மாத பயிற்சி வழங்கப்படும். பின்னர் கனரா வங்கியில் 3 மாத பயிற்சி வழங்கப்படும். ஓராண்டு பயிற்சிக்குப் பின் தகுதியானவர்கள் பணியில் சேர்க்கப்படுவார்கள். அவர் களுக்கு வங்கிப் பணி முதுநிலை டிப்ளமோ படிப்பு படித்ததற்கான சான்றிதழும் வழங்கப்படும்.

இதற்கான ஆன்லைன் தேர்வு 23-12-2018-ந் தேதி நடக்கிறது.

விண்ணப்பிக்கும் முறை

விருப்பமும், தகுதியும் உள்ளவர்கள் இணையதளம் வழியாக விண்ணப்பம் சமர்ப்பிக்கலாம். விண்ணப்பிக்க கடைசிநாள் 13-11-2018-ந் தேதியாகும்.

இது பற்றிய விரிவான விவரங்களை www.canarabank.com என்ற இணையதள பக்கத்தில் பார்க்கலாம்.

மேலும் செய்திகள்