தொழில் அதிபரின் மனைவி, மகளை கட்டிப்போட்டு ரூ.63 லட்சம் நகை, பணம் கொள்ளையடித்த 3 பேர் சிக்கினர்

தொழில் அதிபரின் மனைவி, மகளை கட்டிப்போட்டு ரூ.63 லட்சம் நகை, பணத்தை கொள்ளையடித்த 3 பேரை போலீசார் கைது செய்தனர்.

Update: 2018-10-28 23:36 GMT
மும்பை, 

தொழில் அதிபரின் மனைவி, மகளை கட்டிப்போட்டு ரூ.63 லட்சம் நகை, பணத்தை கொள்ளையடித்த 3 பேரை போலீசார் கைது செய்தனர்.

கத்தி முனையில் மிரட்டல்

மும்பை கார் மேற்கு பகுதியை சேர்ந்தவர் நதீர் சையத். தொழில் அதிபர். இவர் கடந்த மாதம் 5-ந் தேதி வேலை விஷயமாக வெளியே சென்றிருந்தார். வீட்டில் மனைவி மற்றும் மகள் இருந்தனர். இந்தநிலையில், வீட்டின் காலிங்பெல் அடிக்கும் சத்தம் கேட்டு அவரது மனைவி கதவை திறந்தார். அப்போது வெளியே வாலிபர் ஒருவர் கையில் பார்சலுடன் நின்று கொண்டிருந்தார்.

அவர் தன்னை கூரியர் ஊழியர் என அறிமுகப்படுத்தி கொண்டு பார்சல் வந்திருப்பதாக கூறி உள்ளே நுழைந்தார். திடீரென மேலும் 2 பேர் வீட்டிற்குள் புகுந்து கதவை உள்பக்கமாக பூட்டினர்.

பின்னர் 3 ஆசாமிகளும் தாய், மகள் இருவரையும் கத்தி முனையில் மிரட்டி துப்பட்டாவால் கட்டி போட்டனர்.

3 பேர் கைது

இதையடுத்து அந்த ஆசாமிகள் வீட்டில் இருந்த ரூ.63 லட்சம் மதிப்புள்ள நகை, பணத்தை கொள்ளையடித்து விட்டு அங்கிருந்து மின்னல் வேகத்தில் தப்பி ஓடி விட்டனர். இந்த சம்பவம் குறித்து கார் போலீசார் வழக்கு பதிவு செய்து கொள்ளையர்களை வலைவீசி தேடி வந்தனர்.

இந்த நிலையில், வெவ்வேறு மாநிலங்களில் பதுங்கியிருந்த கொள்ளையர்கள் 3 பேரையும் போலீசார் கைது செய்தனர். விசாரணையில் அவர்களது பெயர் முகமது சோகைல் அன்சாரி, மன்சூர் சேக், ரபிக் அலி என்பது தெரியவந்தது. அவர்களிடம் இருந்த ரூ.10 லட்சம், 5 செல்போன்கள் ஆகியவற்றை போலீசார் கைப்பற்றினர்.

விசாரணையின் போது, கொள்ளை சம்பவத்தில் வாஷிர் அலி அகமது என்பவருக்கும் தொடர்பு இருப்பது தெரியவந்தது. போலீசார் அவரை வலைவீசி தேடி வருகின்றனர்.

மேலும் செய்திகள்