மதுவிலக்கை அமல்படுத்துவது தான் நல்ல அரசு - நடிகர் சிவகுமார் பேச்சு
மதுவிலக்கை அமல்படுத்துவதுதான் நல்ல அரசு என்று நடிகர் சிவகுமார் கூறினார்.
கோவை,
முன்னாள் காவல் துறை அதிகாரிகள் பொது நல அறக்கட்டளை சார்பில் முப்பெரும் விழா கோவை காவலர் பயிற்சி மைதானத்தில் நேற்று நடைபெற்றது. வேலை வாய்ப்பு பயிற்சி மைய வளாகத்தை தலைமையக கூடுதல் டி.ஜி.பி. ரவி திறந்து வைத்தார்.
காவலர் மருத்துவமனைக்கான ரத்த பரிசோதனை கருவியை கோவை மாநகர போலீஸ் கமிஷனர் சுமித் சரண் வழங்கினார். வேலை வாய்ப்பு பயிற்சி மைய நூலகத்தை மேற்கு மண்டல ஐ.ஜி. பெரியய்யா தொடங்கி வைத்தார்.
விழாவில் காவல் துறை அறக்கட்டளைக்கான புதிய இணையதளத்தை நடிகர் சிவகுமார் தொடங்கி வைத்து பேசினார். விழாவில் அவர் கூறியதாவது:-
காவல் துறையினர் 24 மணி நேரமும் ஓயாமல் உழைக்கிறார்கள். ஆனாலும் சில சமயம் காவல் துறையின் நடவடிக்கைகள் விமர்சிக்கப்படுகிறது. மாணவர்களை பொறுத்த வரை கல்வி, ஒழுக்கத்தில் தனி கவனம் செலுத்த வேண்டும். நான் சினிமா துறையில் சாதித்தாலும் பல்வேறு சிரமங்களை சந்தித்து உள்ளேன். ஆனால் உடல் ஆரோக்கியத்தில் கவனமாக உள்ளேன். 1958-ம் ஆண்டு முதல் யோகா செய்து வருகிறேன்.
சினிமாவில் சில காட்சிகளில் மது குடிப்பது, சிகரெட் பிடிப்பது போன்று நடித்து இருந்தாலும் எந்த தீய பழக்கத்திற்கும் அடிமையாக வில்லை. அதில் கவனமாக இருந்து உள்ளேன். 87 கதாநாயகிகளுடன் நடித்து உள்ளேன். சினிமா துறையில் ஒரு கண்ணோட்டம் உண்டு, ஆனால் நான் என்னை பற்றி தவறான கருத்து இல்லாதபடி கட்டுக்கோப்பாக இருந்து உள்ளேன்.
மாணவர்கள் ஒழுக்கத்தை தீவிரமாக கடைபிடிக்க வேண்டும். மதுப்பழக்கத்தால் ஏராளமானோர் குடி நோயாளிகளாக மாறி உள்ளனர். பல குடும்பங்கள் சீரழிந்து உள்ளது. ஒரு அரசு மதுவிலக்கை கொண்டு வரவேண்டும். மது விலக்கை கொண்டு வந்தால் கள்ளசாராயம் பெருகி விடும் என்பது சரியல்ல. கள்ள சாராயம் குடித்து சாவது என்றால் சாகட்டுமே. மதுவால் பல பெண்களின் தாலி அறுபடுகிறது. எந்தஒரு அரசு மது விலக்கை அமல்படுத்துகிறதோ அதுதான் நல்ல அரசு.
இவ்வாறு அவர் பேசினார்.
விழாவில் கிருஷ்ணா கல்லூரி நிர்வாக அறங்காவலர் எஸ்.மலர்விழி, துரைசாமி, சாந்தி, முன்னாள் காவல் துறை அதிகாரிகள் வெள்ளியங்கிரி, நாகராசன், ஐ.ஏ.எஸ். பயிற்சி மைய நிர்வாகி கனகராஜ் உள்பட பலர் கலந்து கொண்டனர். விழாவில் மாணவ-மாணவிகளுக்கு கல்வி ஊக்கத்தொகை வழங்கப்பட்டது.