கோவை அருகே: பிரபல ரவுடி வெட்டிக்கொலை - 4 பேர் கும்பல் வெறிச்செயல்

கோவை அருகே பிரபல ரவுடியை 4 பேர் கும்பல் வெட்டிக்கொலை செய்தது. இந்த சம்பவம் குறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது:-

Update: 2018-10-28 22:30 GMT
பெ.நா.பாளையம்,


கோவையை அடுத்த பெரியநாயக்கன்பாளையம் அருகே உள்ள சாமிநாயக்கன்பாளையம் கலைஞர் நகரை சேர்ந்தவர் தாஸ். இவருடைய மகன் பிரவீன் (வயது30).

இவர் மீது பெரியநாயக்கன்பாளையம், சரவணம்பட்டி, நீலகிரி மாவட்டம் கோத்தகிரி, சென்னை உள்ளிட்ட பல்வேறு போலீஸ் நிலையங்களில் நகை பறிப்பு, வழிப்பறி, கொலை உள்ளிட்ட பல்வேறு வழக்குகள் உள்ளன.

இதனால் அவர் ரவுடிகள் பட்டியலில் வைக்கப்பட்டார். மேலும் அவர் குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது செய்யப்பட்டு விடுதலையாகி இருந்தார்.

பிரவீன்,நேற்று காலை 8.45 மணியளவில் மோட்டார் சைக்கிளில் அங்குள்ள ஒரு கடைக்கு சென்றார். அங்கிருந்து புறப்பட மோட்டார் சைக்கிளை இயக்க முயன்றார். அப்போது 2 மோட்டார் சைக்கிளில் வந்த 4 பேர் கொண்ட கும்பல் பிரவீனை திடீரென்று சுற்றிவளைத்து சரமாரியாக வெட்டி வெறிச்செயலில் ஈடுபட்டனர். இதில் அவர் சம்பவ இடத்திலேயே ரத்த வெள்ளத்தில் பரிதாபமாக இறந்தார்.

உடனே அந்த கும்பல் அங்கிருந்து தப்பி சென்று விட்டது. முன்னதாக அவர்கள், சாமிநாயக்கன்பாளையம் ரவுடி தொலைந்தான் என சத்தம் போட்டபடி சென்றுள்ளனர். பிரவீன் கொலை செய்யப் பட்ட இடம் அருகே டீக்கடை, இறைச்சி கடை உள்ளிட்ட ஏராளமான கடைகள் உள்ளன.

இதனால் அங்கு பொதுமக்கள் குவிந்து இருந்தனர். ஆட்கள் நடமாட்டம் மிகுந்த பகுதியில் பலரது முன்னிலையில் இந்த கொலை நடந்துள்ளது. இதை பார்த்து அதிர்ச்சி அடைந்த பொதுமக்கள் அங்கிருந்து ஓட்டம் பிடித்தனர். சிலர் கடைகளை பூட்டிவிட்டு சென்றனர். இந்த கொலை குறித்து பெரியநாயக்கன் பாளையம் போலீசில் புகார் செய்யப்பட்டது. உடனே போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்தனர்.

இதை அறிந்த கோவை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பாண்டியராஜன், போலீஸ் துணை சூப்பிரண்டு மணி, இன்ஸ்பெக்டர் சக்திவேல், சப்-இன்ஸ்பெக்டர் மனோ ஆகியோரும் விரைந்து சென்று விசாரணை நடத்தினார்கள். போலீஸ் மோப்ப நாய் வரவழைக்கப்பட்டது. கைரேகை நிபுணர்களும் வந்து தடயங்களை சேகரித்தனர்.

பின்னர் பிரவீன் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக கோவை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். பிரவீன் கொலை செய்யப்பட்ட இடத்தின் அருகே ஒரு பெட்ரோல் பங்க் உள்ளது. அங்கு பொருத்தப்பட்டுள்ள கண்காணிப்பு காமிராவில் கொலையாளிகள் உருவம் பதிவாகி உள்ளதா? என்பது தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

இந்த கொலை குறித்து போலீஸ் அதிகாரிகள் கூறும்போது, முன்விரோதம் காரணமாக பிரவீன் கொலை செய்யப்பட்டாரா? அல்லது கொள்ளையடித்த நகை உள்ளிட்ட பொருட்களை பங்கிடுவதில் ஏற்பட்ட பிரச்சினையில் கொலை செய்யப்பட்டாரா? என்பது குறித்து தனிப்படை போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள். கொலை கும்பலில் 4 பேர் இருந்ததாக சந்தேகிக்கிறோம். கொலையாளிகள் விரைவில் பிடிபடுவார்கள் என்றனர்.

பட்டப்பகலில் நடைபெற்ற இந்த கொலை சம்பவம் கோவையில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

மேலும் செய்திகள்