ஆட்டோ டிரைவரை குத்திக்கொன்றது ஏன்? 4 பேரிடம் போலீசார் நடத்திய விசாரணையில் திடுக்கிடும் தகவல்

ஆட்டோ டிரைவரை கொடூரமாக குத்திக்கொன்றது ஏன்? என்று 4 பேரிடம் போலீசார் நடத்திய விசாரணையில் திடுக்கிடும் தகவல் வெளியானது.

Update: 2018-10-28 22:30 GMT
திருச்சி உறையூர் பணிக்கர் தெருவை சேர்ந்தவர் துரைராஜ்(வயது 45). ஆட்டோ டிரைவரான இவரை கடந்த 18-ந் தேதி சிலர் கடத்தி சென்று படுகொலை செய்தனர். இது பற்றி உறையூர் போலீசார் நடத்திய விசாரணையில் துரைராஜ் நண்பர்களுடன் சேர்ந்து தீபாவளி சீட்டு பணம் பிரித்த பிரச்சினையில் அவரை 4 பேர் கடத்தி சென்று கொலை செய்தது தெரியவந்தது. இந்த கொலை வழக்கு தொடர்பாக கடந்த 22-ந் தேதி உறையூரை சேர்ந்த அப்பு சரவணன்(37), சதீஸ்(26), ஸ்ரீரங்கம் தாலுகா போதூர் பகுதியை சேர்ந்த தனபால்33), திருவெறும்பூரை சேர்ந்த சுரேஷ்(34) ஆகியோர் அரியலூர் கோர்ட்டில் சரண் அடைந்தனர்.

பின்னர் அவர்கள் 4 பேரும் திருச்சி சிறையில் அடைக்கப்பட்டனர். ஆட்டோ டிரைவர் துரைராஜை கொடூரமாக கொலை செய்தும், அவரது உடலை மூட்டையாக கட்டியும் வைத்து இருந்ததால் இந்த கொலையில் கூலிப்படையினருக்கு தொடர்பு இருக்குமோ? என போலீசார் சந்தேகம் அடைந்தனர். இதனால் சரண் அடைந்த 4 பேரையும் ஒருவாரம் போலீஸ் காவலில் எடுத்து விசாரிக்க முடிவு செய்தனர். இதற்காக திருச்சி ஜுடிசியல் மாஜிஸ்திரேட்டு கோர்ட்டு எண் 4-ல் உறையூர் போலீசார் மனுத்தாக்கல் செய்தனர். மனுவை விசாரித்த மாஜிஸ்திரேட்டு, அவர்கள் 4 பேரையும் 4 நாட்கள் காவலில் விசாரிக்க அனுமதி வழங்கினார்.

இதையடுத்து 4 பேரையும் ரகசிய இடத்தில் வைத்து போலீசார் தீவிர விசாரணை நடத்தினர். இந்த விசாரணையில் பல திடுக்கிடும் தகவல்கள் வெளியானது. இது பற்றி போலீஸ் தரப்பில் கூறியதாவது:-

கொலை செய்யப்பட்ட துரைராஜுக்கும், உறையூரை சேர்ந்த அப்பு சரவணனுக்கும் பழக்கம் இருந்துள்ளது. இதனால் அவர்கள் இருவருக்கும் பணம் கொடுக்கல்- வாங்கல் பிரச்சினை இருந்துள்ளது. இதற்கிடையே அப்பு சரவணனுக்கு பல பெண்களுடன் தொடர்பு இருந்துள்ளது. இதனை தெரிந்து கொண்ட துரைராஜ், அதனை வெளியில் சொல்லி அசிங்கப்படுத்தி விடுவேன் என்று அவரை பல நாட்களாக மிரட்டி வந்துள்ளார். இதனால் ஏற்பட்ட ஆத்திரத்தில் அப்பு சரவணன் தனது நண்பர்களுடன் சேர்ந்து துரைராஜை தீர்த்து கட்ட முடிவு செய்தார். சம்பவத்தன்று அவரை அழைத்து சென்று 4 பேரும் மதுஅருந்தி உள்ளனர். பின்னர் அவரை கத்தியால் சரமாரியாக குத்தி படுகொலை செய்துவிட்டு, உடலை மூட்டையாக கட்டி அவரது ஆட்டோவிலேயே வைத்தனர். மேலும், கொலையை மறைக்க மிளகாய்பொடியை ஆட்டோ முழுவதும் தூவிவிட்டு சென்றுள்ளனர்.

இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.

மேலும் செய்திகள்