கோத்தகிரியில்: பன்றிக்காய்ச்சலுக்கு வியாபாரி பலி
கோத்தகிரியில் பன்றிக்காய்ச்சலுக்கு வியாபாரி பலியானார்.
கோத்தகிரி,
கோத்தகிரி அருகே கோடநாடு சாலையில் உள்ள எஸ்.கைகாட்டியை சேர்ந்தவர் நூர் முகமது. இவரது மகன் முகமது ரபீக்(வயது 41). வியாபாரி. இவருக்கு திருமணம் ஆகி மனைவியும், 2 பெண் குழந்தைகளும் உள்ளனர். இந்த நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு முகமது ரபீர் காய்ச்சலால் பாதிக்கப்பட்டார். உடனே உறவினர்கள் அவரை அருகில் உள்ள ஆஸ்பத்திரிக்கு சிகிச்சைக்காக அழைத்து சென்றனர். அங்கு பரிசோதனை செய்த டாக்டர்கள் அவருக்கு பன்றிக்காய்ச்சல் பாதித்து இருப்பதை உறுதி செய் தனர். இதையடுத்து முகமது ரபீக் கோவையில் உள்ள ஒரு தனியார் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார்.
இதுகுறித்து தகவல் அறிந்த கோத்தகிரி சுகாதார ஆய்வாளர் பிரேம்குமார், டாக்டர் சிவானந்தம் ஆகியோர் அடங்கிய குழுவினர் எஸ்.கைகாட்டி பகுதியை நேரில் சென்று ஆய்வு செய்தனர். மேலும் முகமது ரபீக்கின் வீட்டை சுற்றிலும் துப்புரவு பணிகள் மேற்கொள்ளப்பட்டதுடன், அவரது உறவினர்களுக்கு காய்ச்சல் தடுப்பு மாத்திரைகளும் வழங்கப்பட்டன.
இந்த நிலையில் கோவையில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வந்த முகமது ரபீக் நேற்று முன்தினம் இரவு சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். பன்றிக்காய்ச்சலுக்கு ஒருவர் உயிரிழந்த சம்பவம் கோத்தகிரி பகுதி மக்களிடையே பீதியை ஏற்படுத்தி உள்ளது.