மோட்டார் சைக்கிள் மீது பஸ் மோதி விபத்து 2 வாலிபர்கள் பரிதாப சாவு அம்பர்நாத்தில் துயரம்
மோட்டார் சைக்கிள் மீது பஸ் மோதி ஏற்பட்ட விபத்தில் 2 வாலிபர்கள் உயிரிழந்தனர். தப்பி ஓடிய பஸ் டிரைவரை போலீசார் தேடி வருகின்றனர்.
அம்பர்நாத்,
மோட்டார் சைக்கிள் மீது பஸ் மோதி ஏற்பட்ட விபத்தில் 2 வாலிபர்கள் உயிரிழந்தனர். தப்பி ஓடிய பஸ் டிரைவரை போலீசார் தேடி வருகின்றனர்.
பஸ் மோதி விபத்து
தானே மாவட்டம் அம்பர்நாத் பகுதியை சேர்ந்தவர் தேஜஸ் (வயது18). சம்பவத்தன்று இவர் தனது நண்பர் சந்திரசேகர் (17) என்பவருடன் மோட்டார் சைக்கிளில் வெளியே சென்று கொண்டிருந்தார். மகாடா சர்க்கிள் பைப்லைன் அருகே உள்ள சாலையில் சென்று கொண்டிருந்த போது, எதிரே வேகமாக வந்த தனியார் பஸ் ஒன்று மோட்டார் சைக்கிளின் மீது பயங்கரமாக மோதியது.
இந்த விபத்தில் மோட்டார் சைக்கிளில் இருந்து, 2 பேரும் தூக்கி வீசப்பட்டு படுகாயமடைந்தனர்.
2 பேர் பலி
இதனை கண்டு பதறி போன அப்பகுதியை சேர்ந்தவர்கள், ரத்த வெள்ளத்தில் துடித்துக்கொண்டிருந்த 2 பேரையும் மீட்டு அருகில் உள்ள மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு டாக்டர்கள் பரிசோதித்து விட்டு இருவரும் இறந்து விட்டதாக தெரிவித்தனர். தகவல் அறிந்து வந்த சிவாஜி நகர் போலீசார் இருவரது உடல்களையும் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.
இதற்கிடையே விபத்தை ஏற்படுத்திய தனியார் பஸ் டிரைவர் அங்கிருந்து தப்பி ஓடி விட்டார். போலீசார் அவர் மீது வழக்குப்பதிவு செய்து வலைவீசி தேடி வருகின்றனர்.