வாடிக்கையாளர்கள் முதலீடு செய்த ரூ.85 லட்சம் நகை, பணத்துடன் நகைக்கடைக்காரர் தலைமறைவு போலீஸ் வலைவீச்சு
வாடிக்கையாளர்களின் ரூ.85 லட்சம் நகை, பணத்துடன் தலைமறைவான நகைக்கடைக்காரரை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.
தானே,
வாடிக்கையாளர்களின் ரூ.85 லட்சம் நகை, பணத்துடன் தலைமறைவான நகைக்கடைக்காரரை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.
நகைக்கடைக்காரர்
தானேயில் அஜித் கோத்தாரி என்பவர் நகைக்கடை நடத்தி வந்தார். இவர் வாடிக்கையாளர்களை கவருவதற்காக பல்வேறு சேமிப்பு திட்டங்களை செயல்படுத்தினார். அந்த திட்டங்களில் வாடிக்கையாளர்கள் பலரும் பணம் மற்றும் தங்களது நகைகளை முதலீடு செய்திருந்தனர்.
இந்த நிலையில், திடீரென ஒருநாள் அஜித் கோத்தாரி தனது கடையை மூடிவிட்டு வாடிக்கையாளர்களின் பணம் மற்றும் நகைகளுடன் தலைமறைவாகி விட்டார். இதை அறிந்து அவரது கடையில் முதலீடு செய்தவர்கள் அதிர்ச்சி அடைந்தனர்.
வலைவீச்சு
மேலும் சம்பவம் குறித்து அவர்கள் போலீசில் புகார் கொடுத்தனர். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினார்கள்.
இதில் அஜித் கோத்தாரி வாடிக்கையாளர்களின் ரூ.85 லட்சம் மதிப்புள்ள நகை, பணத்துடன் தலைமறைவானது கண்டுபிடிக்கப்பட்டது. இதில் நகைகளின் மதிப்பு மட்டும் ரூ.18 லட்சம் ஆகும்.
அஜித் கோத்தாரி தனது கடையை வேறொருவரிடம் விற்று விட்டதாகவும் கூறப்படுகிறது. போலீசார் அவரை வலைவீசி தேடி வருகின்றனர்.