துறையூர் பஸ் நிலையம் அருகே கருமாரியம்மன் கோவிலில் திருட்டு மர்மநபர்களுக்கு வலைவீச்சு
துறையூர் பஸ் நிலையம் அருகே உள்ள கருமாரியம்மன் கோவிலில் திருட்டு சம்பவத்தில் ஈடுபட்ட மர்மநபர்களை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.
துறையூர் பஸ் நிலையம் அருகே கருமாரியம்மன் கோவில் உள்ளது. இங்கு சரவணன் (வயது45) என்பவர் பூசாரியாக வேலை செய்து வருகிறார். இவர் நேற்று முன்தினம் இரவு வழக்கம்போல் பூஜை முடிந்ததும் கோவிலை பூட்டிவிட்டு சென்றுவிட்டார்.
நேற்று காலையில் மீண்டும் கோவிலுக்கு வந்த போது, பின்பக்க இரும்பு கதவு திறந்து கிடந்தது.
மேலும் உண்டியலும், கோவிலில் உள்ள அலுவலக அறையின் கதவு உடைந்து கிடந்தது. அலுவலக அறையில் வைக்கப்பட்டு இருந்த மேஜையின் டிராயர் உடைத்து கிடந்தது. அதில் வைத்திருந்த ரூ.72 ஆயிரம் பணத்தை காணவில்லை. யாரோ மர்ம நபர்கள் நள்ளிரவில் கோவில் கதவை உடைத்து அதனை திருடி சென்றுள்ளனர். மேலும் உண்டியலில் இருந்த காணிக்கை பணமும் திருடப்பட்டு இருந்தது.
இது குறித்து சரவணன் துறையூர் போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். அதன் பேரில் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து விசாரணை நடத்தினர். மேலும் இது தொடர்பாக வழக்குப் பதிவு செய்து கோவிலில் திருடிய மர்மநபர்களை வலைவீசி தேடி வருகின்றனர். எப்போதும், மக்கள் நடமாட்ட முள்ள பஸ்நிலையம் அருகே உள்ள கோவிலில் திருட்டு நடந்தது அப்பகுதி மக்களை அச்சமடைய செய்துள்ளது.