கடலூரில்: பன்றிக்காய்ச்சலுக்கு என்ஜினீயர் பலி

கடலூரில் பன்றிக்காய்ச்சலுக்கு என்ஜினீயர் பலியானார். இதுபற்றிய விவரம் வருவமாறு:-

Update: 2018-10-28 21:45 GMT
கடலூர், 

கடலூர் மஞ்சக்குப்பம் விவேகானந்தா அவன்யூ பகுதியை சேர்ந்தவர் வெங்கடேசன். இவரது மகன் கோபிநாதன்(வயது 29). என்ஜினீயரான இவர், கடலூர் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு தானே சிறப்பு திட்டத்தின் கீழ் வீடு கட்டிக்கொடுக்கும் பணியில் ஒப்பந்த பணியாளராக இருந்து வந்தார்.

இந்த நிலையில் கோபிநாதனுக்கு கடந்த 26-ந்தேதி காய்ச்சல் ஏற்பட்டது. இதையடுத்து அவர் சிகிச்சைக்காக கடலூர் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். அங்கு அவருக்கு டாக்டர்கள் உரிய சிகிச்சை அளித்தனர்.

இருப்பினும் கோபிநாதனுக்கு காய்ச்சல் குணமடையவில்லை. இதையடுத்து அங்கிருந்து மேல் சிகிச்சைக்காக புதுச்சேரியில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். அங்கும் அவரது உடல் நிலையில் முன்னேற்றம் ஏற்படாததால், அவரை சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அழைத்து சென்றனர். அங்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்து வந்த நிலையில், நேற்று சிகிச்சை பலனளிக்காமல் கோபிநாதன் பரிதாபமாக உயிரிழந்தார்.

இதுகுறித்து கோபிநாதனின் உறவினர்கள் கூறுகையில், புதுச்சேரியில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில், சேர்த்த போது, கோபிநாதனின் ரத்த மாதிரியை எடுத்து டாக்டர்கள் பரிசோதித்தனர். அதில் அவருக்கு பன்றிக்காய்ச்சல் ஏற்பட்டு இருப்பதாக டாக்டர்கள் தெரிவித்தனர். தொடர்ந்து தீவிர சிகிச்சையில் இருந்த கோபிநாதன் உயிரிழந்து விட்டார் என்று தெரிவித்தனர். கடலூர் மாவட்டத்தில் டெங்கு காய்ச்சல் தடுப்பு நடவடிக்கைகள் முழுவீச்சில் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இந்த நிலையில் தற்போது பன்றிகாய்ச்சலுக்கு என்ஜினீயர் ஒருவர் பலியாகி இருப்பது மக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தி இருக்கிறது. எனவே இதில் மாவட்ட நிர்வாகமும், சுகாதாரத்துறையினரும் விரைந்து செயல்பட்டு பன்றிக்காய்ச்சல் தடுப்பு நடவடிக்கைகளை தீவிரப்படுத்திட வேண்டும் என்று பொதுமக்கள் தெரிவிக்கின்றனர்.

மேலும் செய்திகள்