பல்லாரியில் தேவேகவுடா- சித்தராமையா இன்று பிரசாரம் ஒரே மேடையில் காங். வேட்பாளருக்கு ஆதரவு திரட்டுகிறார்கள்

பல்லாரியில் தேவே கவுடா, சித்தராமையா ஒன்றாக இணைந்து இன்று (திங்கட்கிழமை) பிரசாரம் செய்ய உள்ளனர்.

Update: 2018-10-28 22:00 GMT
பெங்களூரு, 

பல்லாரியில் தேவே கவுடா, சித்தராமையா ஒன்றாக இணைந்து இன்று (திங்கட்கிழமை) பிரசாரம் செய்ய உள்ளனர். அவர்கள் ஒரே மேடையில் காங்கிரஸ் வேட்பாளருக்கு ஆதரவு திரட்டுகிறார்கள்.

தேவேகவுடா, சித்தராமையா பிரசாரம்

கர்நாடகத்தில் காலியாக உள்ள 3 நாடாளுமன்ற தொகுதிகள் மற்றும் 2 சட்டசபை தொகுதிகளுக்கு வருகிற 3-ந் தேதி இடைத்தேர்தல் நடைபெறுகிறது. இடைத்தேர்தலில் காங்கிரஸ், ஜனதாதளம்(எஸ்) கட்சிகள் கூட்டணி அமைத்துள்ளன. இடைத்தேர்தலில் பா.ஜனதாவை தோற்கடிக்கவும், 5 தொகுதிகளில் வெற்றி பெறவும், காங்கிரஸ், ஜனதாதளம்(எஸ்) கட்சிகள் சார்பில் போட்டியிடும் வேட்பாளர்களை ஆதரித்து கூட்டணி கட்சிகளின் தலைவர்கள் ஒன்றாக இணைந்து பிரசாரத்தில் ஈடுபடவும் திட்டமிட்டு இருந்தனர்.

இந்த நிலையில், பல்லாரி நாடாளுமன்ற தொகுதியில் காங்கிரஸ் சார்பில் போட்டியிடும் உக்ரப்பாவுக்கு ஆதரவாக இன்று (திங்கட்கிழமை) ஜனதாதளம்(எஸ்) கட்சியின் தேசிய தலைவர் தேவேகவுடாவும், முன்னாள் முதல்-மந்திரி சித்தராமையாவும் இணைந்து பிரசாரம் செய்ய உள்ள னர். பல்லாரி டவுன், சண்டூர், ஒசப்பேட்டே உள்ளிட்ட பகுதிகளில் உக்ரப்பாவை ஆதரித்து 2 பேரும் பிரசாரம் செய்ய இருக்கிறார்கள். அவர்கள் இருவரும் ஒரே மேடையில் காங்கிரஸ் வேட்பாளருக்கு ஆதரவு திரட்டுகிறார்கள். அவர்களுடன் நாடாளுமன்ற காங்கிரஸ் குழு தலைவர் மல்லிகார்ஜுன கார்கேவும் உக்ரப்பாவுக்கு ஆதரவாக பிரசாரம் செய்ய உள்ளார்.

தலைவர்கள் இணைந்து...

இதுபோல, சிவமொக்கா தொகுதியில் ஜனதாதளம்(எஸ்) சார்பில் மது பங்காரப்பா வேட்பாளராக நிறுத்தப்பட்டுள்ளார். அந்த தொகுதியில் எடியூரப்பாவின் மகன் ராகவேந்திரா போட்டியிடுகிறார். இந்த இடைத்தேர்தலில் ராகவேந்திராவை தோற்கடிக்க கூட்டணி கட்சி தலைவர்கள் தீவிரம் காட்டி வருகிறார்கள். இதையடுத்து, மது பங்காரப்பாவுக்கு ஆதரவாக நாளை (செவ்வாய்க்கிழமை) தேவேகவுடா, முதல்-மந்திரி குமாரசாமி, முன்னாள் முதல்-மந்திரி சித்தராமையா, மல்லிகார்ஜுன கார்கே மற்றும் கூட்டணி கட்சி தலைவர்கள் கூட்டாக ஒரே மேடையில் தோன்றி பிரசாரம் செய்ய உள்ளனர்.

ராமநகர் தொகுதியில் முதல்-மந்திரி குமாரசாமியின் மனைவி அனிதா குமாரசாமி போட்டியிடுகிறார். அவருக்கு ஆதரவாக வருகிற 31-ந் தேதி தேவேகவுடா பிரசாரம் செய்ய உள்ளார்.

மேலும் செய்திகள்