திண்டிவனம் பகுதியில்: தொடர் வழிப்பறியில் ஈடுபட்ட 3 கல்லூரி மாணவர்கள் கைது
திண்டிவனம் பகுதியில் தொடர் வழிப்பறியில் ஈடுபட்ட 3 கல்லூரி மாணவர்களை போலீசார் கைது செய்தனர்.;
திண்டிவனம்,
திண்டிவனம் பகுதியில் கடந்த சில வாரங்களாக தொடர் திருட்டு, வழிப்பறி போன்ற சம்பவங்கள் நடந்து வந்தது. இதனால் திருட்டு, வழிப்பறி போன்ற சம்பவங்களை தடுக்கும் பொருட்டு விழுப்புரம் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஜெயக்குமார் உத்தரவின் பேரில் திண்டிவனம் துணை போலீஸ் சூப்பிரண்டு திருமால் மேற்பார்வையில் இன்ஸ்பெக்டர் சீனிபாபு தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டது.
இந்த தனிப்படை போலீசார் நேற்று திண்டிவனம்-மரக்காணம் பிரிவு சாலையில் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அந்த வழியாக ஒரே மோட்டார் சைக்கிளில் வந்த 3 பேர் போலீசாரை பார்த்ததும், மோட்டார் சைக்கிளை திருப்பி வந்த வழியே சென்றனர்.
இதனால் சந்தேகமடைந்த போலீசார் அவர்களை துரத்தினர். அப்போது அவர்கள் 3 பேரும் நிலைதடுமாறி மோட்டார் சைக்கிளில் இருந்து தவறி விழுந்தனர். உடனே போலீசார் அவர்களை மடக்கி பிடித்து போலீஸ் நிலையத்துக்கு அழைத்து சென்று விசாரணை நடத்தினர்.
விசாரணையில் அவர்கள், கள்ளக்குறிச்சியை சேர்ந்த செல்வம் மகன்கள் பிரசாந்த் (வயது 21), தினேஷ்(20), விஜி மகன் அருண்குமார்(20) என்பதும், சென்னையில் உள்ள ஒரு தனியார் கல்லூரியில் படித்து வந்ததும் தெரியவந்தது.
தொடர்ந்து நடத்திய விசாரணையில், சென்னை கொருக்குப்பேட்டையை சேர்ந்த காதர் பாஷா மகன் சலீம்(35) என்பவர் கடந்த மாதம் 14-ந் தேதி இரவு அரசூரில் இருந்து காய்கறி மூட்டைகளை ஏற்றிக்கொண்டு சென்னை நோக்கி சென்று கொண்டிருந்தார். திண்டிவனம் புறவழிச்சாலையில் வந்த போது, டீசல் காலியானதால் லாரி நடுரோட்டில் நின்றது. அப்போது பிரசாந்த் உள்ளிட்ட 3 பேரும் சேர்ந்து சலீமை கத்தியால் வெட்டி அவரிடம் இருந்த ரூ.15 ஆயிரத்தை பறித்துள்ளனர். மேலும் தேசிய நெடுஞ்சாலையில் வாகனங்களுடன் நின்று கொண்டிருக்கும் டிரைவர்களை கத்தி, அரிவாள் உள்ளிட்ட ஆயுதங்களால் தாக்கி தொடர் வழிப்பறியில் ஈடுபட்டதும் தெரியவந்தது.
தொடர்ந்து போலீசார் வழக்குப்பதிவு செய்து பிரசாந்த், தினேஷ், அருண்குமார் ஆகிய 3 பேரை கைது செய்தனர். அவர்களிடம் இருந்து மோட்டார் சைக்கிள், கத்தி மற்றும் ஆயிரம் ரூபாய் பறிமுதல் செய்யப்பட்டது.