பழனிசெட்டிபட்டியில்: ஓட்டல், இறைச்சி கடைகளில் அதிகாரிகள் ஆய்வு

பழனிசெட்டிபட்டியில் ஓட்டல், இறைச்சி கடைகளில் அதிகாரிகள் குழுவினர் ஆய்வு செய்தனர்.;

Update: 2018-10-28 21:45 GMT
தேனி, 

தேனி மாவட்ட கலெக்டர் பல்லவி பல்தேவ் உத்தரவின் பேரில் பழனிசெட்டிபட்டி பேரூராட்சி பகுதிகளில் உள்ள ஓட்டல்கள், கடைகள், இறைச்சி விற்பனை கடைகளில் உணவு பாதுகாப்பு துறை, பேரூராட்சி நிர்வாகம், சுகாதாரத்துறை, மாசு கட்டுப்பாட்டு வாரியம் ஆகிய துறை அதிகாரிகளை கொண்ட குழுவினர் நேற்று திடீர் ஆய்வு செய்தனர்.

35-க்கும் மேற்பட்ட கடைகளில் ஆய்வு செய்தனர். இதில், ஆடு, கோழி இறைச்சி, மீன் விற்பனை கடைகளில் ஆய்வு செய்தனர். சில கடைகளில் முந்தைய நாள் இறைச்சியை விற்பனைக்கு வைத்திருந்தது தெரியவந்தது. சுமார் 20 கிலோ இறைச்சி பறிமுதல் செய்யப்பட்டது. மேலும் தடை செய்யப்பட்ட பாலிதீன் பைகளை பயன்படுத்தியதும் கண்டறியப்பட்டு சுமார் 10 கிலோ பறிமுதல் செய்யப்பட்டது.

இதேபோல் பெட்டிக் கடைகளில் விற்பனைக்கு வைத்திருந்த புகையிலை பொருட்கள் 10 கிலோ அளவிலும் பறிமுதல் செய்யப்பட்டது. ஆட்டுத் தோல் சுத்தம் செய்ய பயன்படுத்தப்படும் உப்பை ஓட்டல்களில் சமையலுக்கு பயன்படுத்தியது கண்டுபிடிக்கப்பட்டது. இத்தகைய உப்பு சுமார் 10 கிலோ பறிமுதல் செய்யப்பட்டன. கடைகளை சுத்தமாக பராமரிக்காதது, விதிகளை பின்பற்றாதது போன்ற காரணங்கள் தொடர்பாக 10 கடைகளுக்கு அபராதம் விதிக்கப்பட்டது.

டெங்கு கொசுப்புழுக்கள் உற்பத்தியாக காரணமாய் இருந்ததாக 5 கடைகளுக்கு பேரூராட்சி நிர்வாகம் சார்பில் விளக்க நோட்டீஸ் வழங்கப்பட்டது. இந்த ஆய்வில் பேரூராட்சி செயல் அலுவலர் சித்திரைக்கனி, தேனி வட்டார உணவு பாதுகாப்பு அலுவலர் பாண்டியராஜ், வட்டார சுகாதார மேற்பார்வையாளர் முருகேசன் மற்றும் அலுவலர்கள் பங்கேற்றனர். பறிமுதல் செய்யப்பட்ட பொருட்கள் அனைத்தும் தப்புக்குண்டு பகுதியில் உள்ள குப்பைக்கிடங்கில் கொட்டி அழிக்கப்பட்டது.

மேலும் செய்திகள்