மதுரையில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைவது உறுதி - அமைச்சர் விஜயபாஸ்கர் தகவல்

மதுரையில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைவது உறுதி செய்யப்பட்டு உள்ளது என்று அமைச்சர் விஜயபாஸ்கர் கூறினார்.;

Update: 2018-10-28 23:00 GMT

மதுரை,

உணவு பாதுகாப்பு துறை சார்பில் ஆரோக்கியமான உணவுப்பழக்கத்தை உருவாக்க கோரி சைக்கிள் பேரணி நடைபெறுகிறது. இந்த சைக்கிள் பேரணி திருவனந்தபுரத்தில் தொடங்கி, கன்னியாகுமரி, நெல்லை, விருதுநகர் வழியாக மதுரைக்கு நேற்று வந்தடைந்தது. இதையொட்டி மதுரை காந்தி மியூசியத்தில் பயணக்குழு வரவேற்பு நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர், வருவாய்த்துறை அமைச்சர் ஆர்.பி.உதயகுமார், உணவு பாதுகாப்பு துறை ஆணையர் அமுதா, மாவட்ட கலெக்டர் நடராஜன், மாநகராட்சி ஆணையர் அனீஷ் சேகர் ஆகியோர் கலந்துகொண்டனர்.

இதனை தொடர்ந்து அமைச்சர் விஜயபாஸ்கர் நிருபர்களிடம் கூறுகையில், தமிழகம் முழுவதும் டெங்கு காய்ச்சல் பாதிப்புகள் குறைவாகவே உள்ளன. கடந்த ஆண்டை ஒப்பிடும்போது இந்த ஆண்டு காய்ச்சல் பாதிப்பு கட்டுப்பாட்டுக்குள் உள்ளது. ஆனாலும் வருவாய்த்துறை, நகராட்சித்துறை, சுகாதாரத்துறை உள்ளிட்ட துறைகள் இணைந்து காய்ச்சலை கட்டுப்படுத்தும் பணியில் ஈடுபட்டு வருகிறது. மருத்துவமனைகளில் காய்ச்சல் பாதிப்புகளுக்கு தனி வார்டுகள் அமைக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்படுகிறது. டெங்கு காய்ச்சல் இறப்பும் மிக குறைவாகவே உள்ளது. காய்ச்சல் பாதிக்கப்பட்டவர்கள் தாங்களாகவே மருந்துகள் உட்கொள்ளாமல் இருக்க வேண்டும். ஆனால் காய்ச்சலால் பாதிக்கப்படுபவர்கள் 5 நாள்களுக்கும் மேலாக முறையான சிகிச்சை மேற்கொள்ளாமல் உயிருக்கு ஆபத்தான நிலையில் அரசு மருத்துவமனைகளுக்கு வருகின்றனர். இதனால் தான் இறப்புகள் நேரிடுகிறது. இந்த ஆண்டு இதுவரை 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு குணமடைந்துள்ளனர்.

மதுரையை பொறுத்தவரையில் காய்ச்சலுக்கு தனி வார்டுகள் அமைக்கப்பட்டுள்ளது. பன்றிக்காய்ச்சலால் பாதிக்கப்பட்ட 8 பேர் அனுமதிக்கப்பட்டுள்ளனர். பன்றிக்காய்ச்சலுக்காக 20 லட்சம் தடுப்பு மருந்துகள் இருப்பில் வைக்கப்பட்டுள்ளன. டெங்கு, பன்றிக்காய்ச்சலுக்கான மருந்துகள் போதுமான அளவு அனைத்து அரசு மருத்துவமனைகளிலும் உள்ளது. பன்றிக்காய்ச்சல் வடமாநிலங்கள் மற்றும் அண்டை மாநிலங்களில் தீவிரமாக உள்ளது. தமிழகத்தில் அதன் பாதிப்பு மிகக்குறைவாக உள்ளது. எனவே டெங்கு மற்றும் பன்றிக்காய்ச்சலால் பொதுமக்கள் பீதியடையாமல் முறையான சிகிச்சை மேற்கொள்ள வேண்டும்.

மதுரையில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைவதில் உறுதியாகி விட்டது. அதில் எந்த தடையும் இல்லை. அண்மையில் மத்திய சுகாதராத்துறை அமைச்சரை சந்தித்தபோது அவரும் இதை உறுதிப்படுத்தியுள்ளார். மேலும் எய்ம்ஸ் மருத்துவமனைக்காக ரூ.1,274 கோடி திட்ட மதிப்பீடு தயாரிக்கப்பட்டு ஒப்புதலுக்கு சென்றுள்ளது. எய்ம்ஸ் மருத்துவமனை கட்டப்பட உள்ள இடத்தில் மண் பரிசோதனை செய்யப்பட்டுள்ளது. எனவே எய்ம்ஸ் மருத்துவமனைக்கான அடிக்கல் விரைவில் நாட்டப்படும். மதுரை சூப்பர் ஸ்பெஷாலிட்டி மருத்துவமனையை பொறுத்தவரையில் 99 சதவீத பணிகள் முடிவடைந்துள்ளன. கட்டுமான நிறுவனம் சார்பில் 2 வாரம் அவகாசம் கேட்கப்பட்டுள்ளது. மேலும் அரசு மருத்துவமனை விரிவாக்க கட்டிடம் மற்றும் சூப்பர் ஸ்பெஷாலிட்டி ஆகிய இரண்டையும் இணைக்கும் வகையில் நடைபாதை மேம்பாலம் கட்டப்பட்டு வருகிறது. 15 நாள்களில் அந்த பணி முடிவடைந்தவுடன் விரைவில் சூப்பர் ஸ்பெஷாலிட்டி பிரிவு திறக்கப்படும்.

இவ்வாறு அவர் கூறினார்.

மேலும் செய்திகள்