மாற்றுத்திறனாளிகள் நலனுக்கு பாடுபட்டோருக்கு தேசிய விருதுகள்

மாற்றுத்திறனாளிகள் மறுவாழ்வுக்காக சிறப்பாக செயல்பட்டு வரும் தொண்டு நிறுவனங்கள், தனி நபர்கள், மாற்றுத்திறனுடைய பணியாளர்களுக்கு தேசிய விருதுகள் வழங்கப்படுகிறது.

Update: 2018-10-28 21:30 GMT
நெல்லை, 

மத்திய அரசின் சமூக நீதி மற்றும் அதிகாரம் வழங்கும் அமைச்சகத்தால், மாற்றுத்திறனாளிகள் மறுவாழ்வுக்காக சிறப்பாக செயல்பட்டு வரும் தொண்டு நிறுவனங்கள், தனி நபர்கள், மாற்றுத்திறனுடைய பணியாளர்களுக்கு தேசிய விருதுகள் வழங்கப்படுகிறது. வருகிற டிசம்பர் மாதம் டெல்லியில் இந்த விருதுகள் வழங்கப்பட உள்ளன.

இந்த விருது மொத்தம் 14 பிரிவுகளின் கீழ் வழங்கப்படுகிறது. மாற்றுத்திறனாளிகளில் சிற்பபாக பணிபுரிபவர்கள், சுய தொழில் புரிபவர்கள், சிறந்த பணி அமர்த்தப்படும் அலுவலர் அல்லது நிறுவனம், மாற்றுத் திறனாளிகளுக்காக சிறப்பாக சேவை புரிந்த தனிநபர், நிறுவனம், மாற்றுத்திறனாளிகளில் முன்னோடியாக திகழ்பவர்,

அவர்களது வாழ்க்கை தரத்தை மேம்படுத்தும் வகையில் சிறந்த செயல்முறை ஆராய்ச்சி பணி, தொழில்நுட்பம் அல்லது கண்டுபிடிப்புகளுக்கு, மாற்றுத்திறனுடையோருக்கு தடையற்ற சூழ்நிலையை ஏற்படுத்திய சிறந்த பணிக்காக, மறுவாழ்வு உதவிகள் வழங்கிய சிறந்த மாவட்டம், தேசிய மாற்று திறனுடையோர் நிதி மற்றும் மேம்பாட்டு கழகத்தின் திட்டத்தை செயல்படுத்தும் மாநில அளவிலான முறைப்படுத்தும் நிறுவனம் ஆகிய பிரிவுகளின் கீழ் விருதுகள் வழங்கப்படுகிறது.

மேலும் சிறந்த படைப்பாற்றல் மிக்கவர்கள், சிறந்த படைப்பாற்றல் மிக்க குழந்தைகள், சிறந்த பிரெய்லி அச்சகம், மாற்றுத்திறனாளிகள் எளிதில் பயன்படுத்தக்கூடிய சிறந்த இணையதளம், அவர்களுக்கு அதிகார பகிர்வை ஊக்கப்படுத்தும் சிறந்த மாநிலம் மற்றும் சிறந்த விளையாட்டு வீரர் ஆகிய பிரிவுகளில் விருதுகள் வழங்கப்பட உள்ளன.

இந்த பிரிவுகளின் கீழ் விண்ணப்பிக்க வவிரும்பும் நெல்லை மாவட்டத்தை சேர்ந்தவர்கள், நிறுவனத்தினர் இதற்கான விண்ணப்ப படிவத்தை www.disabilityaffairs.gov.in என்ற இணையதளத்தில் தெரிந்து கொள்ளலாம். மேலும் அதிலிருந்து விண்ணப்பத்தை கீழிறக்கம் செய்து கொள்ளலாம். மேலும் நெல்லை மாவட்ட மாற்று திறனாளிகள் நல அலுவலகத்திலும் விண்ணப்பத்தை பெற்றுக் கொள்ளலாம். பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பத்துடன் தேவையான இணைப்புகளை சேர்த்து வருகிற 29–ந்தேதிக்குள் நெல்லை மாவட்ட மாற்று திறனாளிகள் நல அலுவலகத்தில் 3 நகல்களுடன் விண்ணப்பிக்க வேண்டும்.

இந்த தகவலை கலெக்டர் ஷில்பா தெரிவித்து உள்ளனர்.

மேலும் செய்திகள்