கவர்னர் கிரண்பெடி தவறான தகவல்களை தெரிவிக்கிறார் - முன்னாள் எம்.பி. ராமதாஸ் மறுப்பு

கவர்னர் கிரண்பெடி தவறான தகவல்களை தெரிவிப்பதாக முன்னாள் எம்.பி. ராமதாஸ் கூறியுள்ளார்.

Update: 2018-10-28 23:00 GMT

புதுச்சேரி,

புதுவை முன்னாள் எம்.பி.யும், அ.தி.மு.க. இணை செயலாளருமான ராமதாஸ் விடுத்துள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:–

புதுவை அரசின் பொதுத்துறை நிறுவனங்களில் பணிபுரியும் சுமார் 10 ஆயிரம் பணியாளர்களுக்கு 50 மாதங்களாக நிலுவையில் உள்ள சம்பளம் மற்றும் சம்பள பாக்கியை வாங்குவது தொடர்பாக கவர்னர் கிரண்பெடியின் நிதிநிலை பற்றிய 2 கருத்துகள் தவறான உள்ளன.

கவர்னராலும், மத்திய உள்துறை அமைச்சகத்தாலும் ஒப்புதல் அளிக்கப்பட்ட இந்த ஆண்டின் நிதிநிலை அறிக்கையை முதல்–அமைச்சர் சட்டசபையில் சமர்ப்பித்தார். அந்த ஆவணம்தான் புதுச்சேரி அரசின் நிதிநிலையை விளக்கும் உண்மையாக ஆவணம். அதில் மாநில அரசின் மொத்த வரவு செலவு திட்ட ஒதுக்கீடு ரூ.7 ஆயிரத்து 530 கோடி என்று சொல்லப்பட்டுள்ளது. இதில் மாநில அரசின் வருவாய் ரூ.4,750 கோடியாக, அதாவது மொத்த ஒதுக்கீட்டில் 61 சதவீதமாக இருக்கும். எனவே கவர்னர் கூறுவதுபோல மாநில வருவாய் 40 சதவீதம் அல்ல. 61 சதவீதம்.

மத்திய அரசின் நிதியுதவி ரூ.1,476 கோடி. அதாவது மொத்த வரவு செலவு ஒதுக்கீட்டில் 19.6 சதவீதம் மட்டுமே. கவர்னர் கூறுவதுபோல் 60 சதவீதம் அல்ல. மத்திய நிதியுதவி திட்டங்களின் கீழ் இந்த ஆண்டிற்கு மத்திய அரசின் நிதியுதவியாக ரூ.1,885கோடி கிடைத்தாலும் நிதி ஒதுக்கீட்டில் 25 சதவீதமாக இருக்குமே தவிர 60 சதவீதம் இல்லை.

நிலைமை இப்படியிருக்க ஒரு பொறுப்புள்ள கவர்னர் மக்களிடம் எப்படி ஒரு தவறான தகவலை கொடுத்து மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட ஒரு அரசின் நிதி திரட்டலை குறைத்துக்காட்ட முடியும்? அவர் மறுபடியும் நிதிநிலை அறிக்கை மற்றும் மானிய கோரிக்கைகள் அடங்கிய ஆவணங்களை படித்து பார்த்தோ அல்லது முதன்மை செயலாளர் அல்லது நிதித்துறை செயலாளரை கேட்டோ உண்மையை புரிந்துகொள்ள வேண்டும்.

புதுச்சேரி அரசுக்கு நிதி நெருக்கடி ஏற்பட்டதற்கு முக்கிய காரணமே கடந்த காலங்களில் மத்திய அரசின் உதவி பங்கு குறைந்து வந்ததுதான் என்பதை புள்ளி விவரங்கள் தெளிவாக உணர்த்துகின்றன. பொதுக்கணக்கு தொடங்கியபோது புதுவை அரசு மத்திய அரசுக்கு செலுத்த வேண்டிய கடன்பாக்கி ரூ.2,177 கோடியை மத்திய அரசு இன்றுவரை ரத்துசெய்யவில்லை. 7–வது ஊதியக்குழுவின் பரிந்துரையை அமல்படுத்தியதால் ஏற்பட்டுள்ள கூடுதல் நிதிச்சுமை ரூ.1,050 கோடியை மத்திய அரசு கொடுக்கவில்லை. புதுச்சேரியை நிதிக்குழுவின் பரிந்துரைக்குள் கொண்டுவந்திருந்தால் புதுச்சேரிக்கு பல சிறப்பு நிதி உதவி கிடைத்திருக்கும்.

மத்திய அரசு புதுவை அரசின் நிதி நெருக்கடிக்கும் காரணமாக இருந்துவிட்டு அதுதான் புதுவை அரசை காப்பதுபோல, 60 சதவீத நிதியை வழங்குகிறது என்று கூறுவது மத்திய அரசுக்கு வக்காலத்து வாங்கி பேசும் ஒரு அரசியல் கூற்றாகவே அமைந்துள்ளது. இது மிகவும் வருத்தத்திற்குரிய வி‌ஷயமாகும்.

பொதுத்துறை நிறுவனங்களுக்கும் பட்ஜெட்டில் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது என்பதும் நிதிநிலை அறிக்கை மூலம் நிரூபணம் ஆகிறது. அதாவது பொதுத்துறை நிறுவனங்கள் மற்றும் கூட்டுறவு நிறுவனங்களுக்கு மானியக்கொடையாக (சம்பளங்கள் மற்றும் கொடை) ரூ.762 கோடியும் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. நிதி ஆவணம் இவ்வளவு தெள்ளத்தெளிவாக கூறியுள்ளபோது ஏன் கவர்னர் பொதுத்துறை நிறுவனங்களுக்கு நிதி ஒதுக்கீடு செய்யவில்லை என்று கூறுகிறார்? இந்த ஒதுக்கீட்டிலிருந்து கவர்னர் உடனடியாக பொதுத்துறை ஊழியர்களுக்கு உடனடியாக சம்பளத்தை வழங்கவேண்டும்.

இவ்வாறு அந்த அறிக்கையில் ராமதாஸ் கூறியுள்ளார்.

மேலும் செய்திகள்