கோவில்பட்டியில் ரூ.15 லட்சம் செலவில் முத்துராமலிங்க தேவருக்கு வெண்கல சிலை இயக்குனர் பாரதிராஜா திறந்து வைத்தார்
கோவில்பட்டியில் ரூ.15 லட்சம் செலவில் அமைக்கப்பட்ட முத்துராமலிங்க தேவர் வெண்கல சிலையை திரைப்பட இயக்குனர் பாரதிராஜா திறந்து வைத்தார்.
கோவில்பட்டி,
கோவில்பட்டியில் ரூ.15 லட்சம் செலவில் அமைக்கப்பட்ட முத்துராமலிங்க தேவர் வெண்கல சிலையை திரைப்பட இயக்குனர் பாரதிராஜா திறந்து வைத்தார்.
திறப்பு விழா
கோவில்பட்டி பயணிகள் விடுதி முன்பு, 1981–ம் ஆண்டு இனாம் மணியாச்சியை சேர்ந்த கிருஷ்ணதேவர் மற்றும் சோலையப்பதேவர் ஆகியோர் சார்பில் முழு உருவ தேவர் சிலை நிறுவப்பட்டது. அப்போது அந்த சிலையை நடிகர் சிவாஜி கணேசன் திறந்து வைத்தார். தற்போது கிருஷ்ணதேவர், சோலையப்ப தேவர் ஆகியோரின் பேரனான சிலை பொறுப்பாளர் ஆறுமுகபாண்டியன், பொருளாளர் ஜெயராஜ் மற்றும் சகோதரர்கள் சார்பில் ரூ.15 லட்சம் செலவில் சீரமைப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டு தேவர் சிலை வெண்கல சிலையாக மாற்றப்பட்டு உள்ளது.
இந்த சிலை திறப்பு விழா நேற்று காலையில் நடந்தது. இந்நிகழ்ச்சிக்கு தமிழக செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர் கடம்பூர் ராஜூ தலைமை தாங்கினார். ஆறுமுகபாண்டியன், ஜெயராஜ் ஆகியோர் வரவேற்றனர். நிகழ்ச்சியில் சிறப்பு அழைப்பாளராக திரைப்பட இயக்குனர் பாரதிராஜா கலந்து கொண்டு தேவர் வெண்கல சிலையை திறந்து வைத்தார்.
தேவர் வரலாறு
நிகழ்ச்சியில் அமைச்சர் கடம்பூர் ராஜூ பேசியதாவது:–
பசும்பொன் முத்துராமலிங்க தேவர் தமிழகத்துக்கு சொந்தமானவர் மட்டும் கிடையாது. அவர் தேசியத்துக்கு சொந்தமானவர். முன்னாள் முதல்–அமைச்சர் ஜெயலலிதா, தேவருக்கு சென்னை நந்தனத்தில் சிலை வைத்தது மட்டுமின்றி பசும்பொன்னில் அவரின் நினைவு இடத்தில் சிலைக்கு தங்கு கவசம் வழங்கினார். அவர் வழியில் செயல்பட்டு வரும் இந்த அரசு, பள்ளி பாடத்தில் இருந்து நீக்கப்பட்ட தேவர் குறித்த வரலாற்றினை மீண்டும் பாட புத்தகத்தில் இடம் பெற செய்துள்ளது.
இவ்வாறு அவர் பேசினார்.
அதன் பின்னர் இயக்குனர் பாரதிராஜா பேசியதாவது:–
உலகில் மனிதன் பிறக்கலாம், இறக்கலாம். ஆனால் வாழ்வியல் பதிவு வேண்டும். அந்த வாழ்வியல் வரலாற்று பதிவினை கொண்டவர் பசும்பொன் முத்துராமலிங்க தேவர். பலர் வாழ்வில் முன்னேற்ற ஏணிப்படியாக திகழ்ந்தவர். எந்த பதவியையும் விரும்பாதவர். புத்தரை நாம் நேரில் பார்த்தது கிடையாது. ஆனால் நம்மிடையே வாழ்ந்த விபூதி பூசிய புத்தர் தேவர். தனது இறுதி காலங்களில் தாழ்த்தப்பட்ட சமுதாயத்தினை சேர்ந்தவர்களுக்கு தனது நிலங்களை வழங்கினார். அவரது வழியில் சமுதாய மற்றும் அரசியல் பணியினை செய்ய வேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.
இதனை தொடர்ந்து நிருபர்கள் பாரதிராஜாவிடம், இலங்கையில் ராஜபக்சே பிரதமராக பதவி ஏற்றுள்ளது குறித்து கேட்டதற்கு காலம் பதில் சொல்லும் என்று கூறினார்.
கலந்துகொண்டவர்கள்
நிகழ்ச்சியில் அ.தி.மு.க. மாவட்ட செயலாளர் சி.த.செல்லப்பாண்டியன், ஊராட்சி செயலாளர் ரமேஷ், இனாம் மணியாச்சி வேளாண்மை கூட்டுறவு சங்க தலைவர் மகேஷ்குமார், ம.தி.மு.க. மாவட்ட இளைஞர் அணி செயலாளர் விநாயகா ரமேஷ், நகர செயலாளர் பால்ராஜ், தொழில் அதிபர் கந்தசாமி உள்பட பலர் கலந்து கொண்டனர். முடிவில் லட்சுமணன், மாரியம்மாள், சோலையப்பன் ஆகியோர் நன்றி கூறினார்கள்.