மயிலாடுதுறை அருகே சாராயம் விற்ற பெண் உள்பட 2 பேர் கைது தப்பி ஓடிய 2 பேருக்கு வலைவீச்சு

மயிலாடுதுறை அருகே சாராயம் விற்ற பெண் உள்பட 2 பேரை போலீசார் கைது செய்தனர். மேலும் தப்பி ஓடிய 2 பேரை போலீசார் தேடி வருகிறார்கள்.

Update: 2018-10-28 22:30 GMT
நாகை மாவட்டம் மயிலாடுதுறை அருகே உள்ள அகரகீரங்குடியில் சாராயம் விற்கப்படுவதாக பெரம்பூர் போலீசாருக்கு தகவல் கிடைத்தது.

இதைத்தொடர்ந்து போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்றனர். அப்போது அங்கு சாராயம் விற்ற இருவரை போலீசார் மடக்கி பிடிக்க முயன்றனர். இதில் ஒருவர் பிடிபட்டார். மற்றொருவர் தப்பி ஓடிவிட்டார். பிடிபட்டவரிடம் போலீசார் நடத்திய விசாரணையில் அவர் திருவாரூர் மாவட்டம் பூந்தோட்டம் காளியம்மன் கோவில் தெருவை சேர்ந்த அருணாசலம் மகன் ராஜாராமன்(வயது27) என்றும், தப்பிஓடியவர் அகரகீரங்குடி தெற்கு தெருவை சேர்ந்த பாண்டியன் மகன் சார்லஸ் என்பதும் தெரியவந்தது. ராஜாராமனிடம் இருந்து 110 லிட்டர் சாராயத்தை போலீசார் பறிமுதல் செய்து அவரை கைது செய்தனர். தப்பி ஓடிய சார்லசை போலீசார் தேடிவருகினறனர். இதைப்போல எழுமகளுர் மேலத்தெருவில் தனது வீட்டின் கொல்லைப்்புறத்தில் சாராய விற்பனையில் ஈடுபட்ட மணிவண்ணன் மனைவி விஜயா(28) என்பவரை போலீசார் கைது செய்து அவரிடம் இருந்து 110 லிட்டர் சாராயத்தை பறிமுதல் செய்தனர்.


மயிலாடுதுறை அருகே எழுமகளுர் மெயின்ரோட்டில் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது அந்த வழியாக மோட்டார் சைக்கிளில் வந்த ஒருவரை தடுத்து நிறுத்தினர். போலீசாரை கண்டதும் அந்த நபர் மோட்டார் சைக்கிளை அங்கேயே போட்டு விட்டு

தப்பிஓடிவிட்டார். மர்மநபர் விட்டு சென்ற அந்த மோட்டார் சைக்கிளில் பிளாஸ்டிக் கேனில் 110 லிட்டர் சாராயம் இருந்தது. இதைத்தொடர்ந்து போலீசார் சாராயம் மற்றும் மோட்டார் சைக்கிளை பறிமுதல் செய்து தப்பி ஓடிய மர்மநபரை தேடி வருகிறார்கள்.

மேலும் செய்திகள்