கறம்பக்குடி அருகே மோட்டார் சைக்கிள் மீது கார் மோதல்; அரசு பஸ் டிரைவர் பலி துக்க வீட்டிற்கு சென்று திரும்பியபோது பரிதாபம்
கறம்பக்குடி அருகே துக்க வீட்டிற்கு சென்றுவிட்டு திரும்பியபோது, கார் மோதியதில் அரசு பஸ் டிரைவர் பரிதாபமாக இறந்தார்.
புதுக்கோட்டை மாவட்டம், கறம்பக்குடி அருகே உள்ள பந்துவக்கோட்டையை சேர்ந்தவர் தமிழ்செல்வன் (வயது 56). அரசு பஸ் டிரைவரான இவர் குடும்பத்துடன் தஞ்சாவூரில் வசித்து வருகிறார். இவர் நேற்று காலை கறம்பக்குடி அருகே உள்ள பள்ளத்தான்மனையில் உறவினர் வீட்டு துக்க நிகழ்ச்சிக்கு மோட்டார் சைக்கிளில் சென்றார். பின்னர் அதே மோட்டார் சைக்கிளில் தஞ்சாவூருக்கு திரும்பி சென்று கொண்டிருந்தார்.
கறம்பக்குடி, மருதன்கோன்விடுதி சொக்கன்தெரு பஸ் நிறுத்தம் அருகே சென்றபோது, எதிரே திருச்சியில் இருந்து பட்டுக்கோட்டை நோக்கி சென்ற கார், தமிழ்செல்வன் ஓட்டி வந்த மோட்டார் சைக்கிள் மீது மோதியது. இதில் மோட்டார் சைக்கிளில் இருந்து தூக்கி வீசப்பட்ட தமிழ்செல்வன் படுகாயமடைந்தார். உடனடியாக அங்கிருந்தவர்கள் அவரை மீட்டு சிகிச்சைக்காக தஞ்சாவூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
ஆனால் மருத்துவமனைக்கு செல்லும் வழியிலேயே தமிழ்செல்வன் பரிதாபமாக இறந்தார். இதுகுறித்து தமிழ்செல்வனின் மனைவி வளர்மதி கொடுத்த புகாரின்பேரில், கறம்பக்குடி போலீஸ் சப்- இன்ஸ்பெக்டர் பெரியசாமி வழக்குப்பதிந்து, கார் டிரைவர் பட்டுக்கோட்டையை சேர்ந்த வீரமணி (37) என்பவரை கைது செய்து விசாரணை நடத்தி வருகிறார்.