ஆசனூர் அருகே கேர்மாளம் வனப்பகுதியில் ரோட்டை கடந்த கரடி

ஆசனூர் அருகே கேர்மாளம் வனப்பகுதியில் கரடி ரோட்டை கடந்து சென்றது.

Update: 2018-10-28 22:30 GMT

தாளவாடி,

சத்தியமங்கலம் அருகே உள்ள ஆசனூர் வனப்பகுதியில் புலி, சிறுத்தை, மான், யானை, காட்டெருமை, கரடி உள்பட பல்வேறு வனவிலங்குகள் வசித்து வருகின்றன. இதில் யானை, மான், கரடி உள்ளிட்ட விலங்குகள் அடிக்கடி ரோட்டை கடந்து செல்கின்றன.

இந்தநிலையில் நேற்று காலை ஆசனூர் அருகே உள்ள கேர்மாளம் ரோட்டின் ஓரத்தில் கரடி ஒன்று நின்று கொண்டு இருந்தது. அப்போது அந்த வழியாக காரில் வந்தவர்கள் அந்த கரடியை பார்த்தனர். பின்னர் அவர்கள் தங்களுடைய செல்போனில் கரடியை படம் பிடித்தனர். அப்போது அந்த கரடி வாகன ஓட்டிகளை நோக்கி ஓடி வந்தது. இதனால் வாகன ஓட்டிகள் அதிர்ச்சி அடைந்ததோடு, தங்களுடைய காரை பின்னோக்கி நகர்த்தினர்.

சிறிது நேரத்தில் அந்த கரடி ரோட்டை கடந்து சென்றுவிட்டது. இதைத்தொடர்ந்து வாகன ஓட்டிகள் அங்கிருந்து புறப்பட்டு சென்றனர்.

இதுகுறித்து ஆசனூர் வனத்துறையினர் கூறுகையில், ‘கேர்மாளம் ரோட்டில் தற்போது கரடிகள் நடமாட்டம் அதிகமாக உள்ளது. அதனால் சுற்றுலா பயணிகள் வாகனங்களில் மெதுவாக செல்ல வேண்டும். மேலும் கரடிகளை பார்க்கும்போது காரை விட்டு கீழே இறங்கக்கூடாது. இதேபோல் கரடிகளுக்கு எவ்வித அச்சுறுத்தலும் செய்யக்கூடாது’ என்று கேட்டுக்கொண்டு உள்ளனர்.

மேலும் செய்திகள்