விபத்தில்லா தீபாவளி கொண்டாடுவது குறித்து பள்ளி மாணவர்களுக்கு விழிப்புணர்வு நிகழ்ச்சி டாக்டர் சிவந்தி ஆதித்தனார் நற்பணி மன்றம் நடத்தியது

விபத்தில்லா தீபாவளி கொண்டாடுவது குறித்து பள்ளி மாணவர்களுக்கு விழிப்புணர்வு நிகழ்ச்சியை டாக்டர் சிவந்தி ஆதித்தனார் நற்பணி மன்றம் நடத்தியது.

Update: 2018-10-27 22:45 GMT
தஞ்சை மாவட்ட டாக்டர் சிவந்தி ஆதித்தனார் நற்பணி மன்றம் சார்பில் விபத்தில்லா தீபாவளி பண்டிகை கொண்டாடுவது குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி தஞ்சை மருத்துவக்கல்லூரி சாலையில் உள்ள நவபாரத் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் நேற்று நடந்தது. நிகழ்ச்சிக்கு டாக்டர் சிவந்தி ஆதித்தனார் நற்பணி மன்ற மாவட்ட தலைவர் வக்கீல் கோ.அன்பரசன் தலைமை தாங்கினார். பொருளாளர் ராதாகிருஷ்ணன் முன்னிலை வகித்தார். பள்ளி முதல்வர் ஜான்சன் வரவேற்றார். நிகழ்ச்சியில் தஞ்சை தீயணைப்பு நிலைய வீரர் பொய்யாமொழி கலந்து கொண்டு பேசினார். அப்போது அவர் பேசியதாவது:-

தீபாவளி பண்டிகையின்போது வெடி வெடிப்பது வழக்கம். அப்போது விபத்துக்கள் ஏற்படுவது நமது அஜாக்கிரதையால் தான். எனவே கவனமுடன் வெடி வெடிக்க வேண்டும். வெடிக்காத வெடிகளின் அருகில் செல்லக்கூடாது. வெடி வெடிக்கும்போது இறுக்கமான பருத்தி ஆடைகளையே அணிய வேண்டும்.

வெடி வெடிக்கும் போது அருகில் வாளியில் தண்ணீர் வைத்துக்கொள்ள வேண்டும். மின்சார வயரின் அருகிலோ, மருத்துவமனை அருகிலோ வெடிகளை வெடிக்கக்கூடாது. திறந்தவெளி பகுதியில் வெடிகள் வெடிக்க வேண்டும். ராக்கெட் வெடிகளால் தான் விபத்துகள் ஏற்படுகிறது. எனவே அது போன்ற வெடிகளை தவிர்ப்பது நல்லது. பட்டாசு வெடிக்க நீளமான குச்சிகளை பயன்படுத்த வேண்டும். பட்டாசுகளை கையில் வைத்து வெடிக்கக்கூடாது. பாட்டில், பிளாஸ்டிக் டப்பா போன்றவற்றில் வெடிகளை வைத்து வெடிக்கக்கூடாது.

இவ்வாறு அவர் கூறினார்.

நிகழச்சியில் நற்பணி மன்ற நிர்வாகிகள் சரவணமுத்து, தமிழரசி மற்றும் பள்ளி ஆசிரியர், ஆசிரியைகள், மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனர்.

மேலும் செய்திகள்