வெண்ணாற்றில் மணல் அள்ளிய 5 மாட்டு வண்டிகள் பறிமுதல் அதிகாரிகள் நடவடிக்கை

வெண்ணாற்றில் மணல் அள்ளிய 5 மாட்டு வண்டிகளை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.

Update: 2018-10-27 22:15 GMT

தஞ்சை பகுதியில் உள்ள வெண்ணாறு, வெட்டாற்றில் அனுமதியின்றி மாட்டு வண்டிகளில் மணல் அள்ளப்பட்டு வருகிறது. வருவாய்த்துறையினர், போலீசார் அதிரடி நடவடிக்கை மேற்கொண்டு மாட்டு வண்டிகளை பறிமுதல் செய்தாலும் தொடர்ந்து ஆறுகளில் மணல் அள்ளப்படுகிறது. இந்தநிலையில் தஞ்சை கீழவாசல் டபீர்குளம் ரோட்டில் டெங்கு கொசு ஒழிப்பு பணியில் வருவாய் கோட்டாட்சியர் சுரேஷ், தாசில்தார் அருணகிரி மற்றும் வருவாய்த்துறையினர் நேற்றுகாலை ஈடுபட்டனர்.

அப்போது அந்த வழியாக மணல் ஏற்றி கொண்டு 5 மாட்டு வண்டிகள் வந்து கொண்டிருந்தன. இவற்றை பார்த்த அதிகாரிகள், அந்த மாட்டு வண்டிகளை வழிமறித்து தொழிலாளர்களிடம் விசாரணை நடத்தினர். அப்போது வெண்ணாற்றில் இருந்து மணல் அள்ளப்பட்டு வந்தது தெரியவந்தது. இதையடுத்து 5 மாட்டு வண்டிகளையும் அதிகாரிகள் பறிமுதல் செய்து தஞ்சை தாசில்தார் அலுவலகத்திற்கு கொண்டு சென்றனர்.

பின்னர் மாடுகளை மட்டும் அவிழ்த்து தொழிலாளர்களுடன் அனுப்பி வைத்தனர். மாட்டு வண்டி தொழிலாளர்களிடம் அபராதம் வசூலிக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து வருகின்றனர். மாட்டு வண்டிகளில் மணல் அள்ள தி.மு.க. ஆட்சி காலத்தில் அனுமதி சீட்டு வழங்கப்பட்டு வந்தது. தற்போது அனுமதி சீட்டு வழங்கப்படுவதில்லை. ஏற்கனவே இருந்ததைபோல் மீண்டும் அனுமதி சீட்டு வழங்க வேண்டும் என மாட்டு வண்டி தொழிலாளர்கள் வலியுறுத்தினர்.

மேலும் செய்திகள்