கூடுவாஞ்சேரி அருகே பிளாஸ்டிக் குடோனில் தீ விபத்து
கூடுவாஞ்சேரி அருகே பிளாஸ்டிக் குடோனில் தீ விபத்து ஏற்பட்டது.
வண்டலூர்,
காஞ்சீபுரம் மாவட்டம் கூடுவாஞ்சேரியை அடுத்த கன்னிவாக்கம் கிராமத்தில் உள்ள சாந்தாதேவி நகர் அருகே தனியாருக்கு சொந்தமான இடத்தில் வடமாநிலத்தை சேர்ந்த 10-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் தங்கி அதே இடத்தில் திறந்தவெளி பகுதியில் கடந்த 3 ஆண்டுகளுக்கு மேலாக பிளாஸ்டிக் குடோன் வைத்து உள்ளனர். இந்த குடோனில் குவியல் குவிலாக பழைய பொருட்களை சேகரித்து வைத்து இருந்தனர். இந்த நிலையில் நேற்று மதியம் 2-மணி அளவில் அந்த பிளாஸ்டிக் குடோனில் திடீரென தீ விபத்து ஏற்பட்டது.
தீ விபத்து ஏற்பட்ட சிறிது நேரத்திலே குடோனில் இருந்த பிளாஸ்டிக் பொருட்கள், வடமாநிலத்தவர்கள் தங்கியிருந்த குடிசைகள் அனைத்தும் மளமளவென தீப்பிடித்து கொழுந்துவிட்டு கரும்புகைவுடன் எரியத்தொடங்கியது. மேலும் குடோனில் இருந்த சில பொருட்கள் பயங்கர சத்தத்துடன் வெடிக்க தொடங்கியது. இதனை பார்த்த அக்கம் பக்கத்தினர் உடனடியாக மறைமலைநகர் தீயணைப்பு வீரர்களுக்கு தகவல் தெரிவித்தனர். தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்திற்கு சுமார் ½ மணி நேரம் கழித்து வந்தனர்.
போலீசார் விசாரணை
ஆனால் அதற்குள் குடோனில் இருந்த பிளாஸ்டிக் பொருட்கள் எரிந்து சாம்பலானது. இருந்தாலும் தீ புகை மூட்டத்துடன் சிறிய அளவில் எரிந்துக்கொண்டிருந்தது. இந்த தீ மேலும் பரவாமல் இருப்பதற்காக தீயணைப்பு வீரர்கள் தண்ணீரை பீய்ச்சி அடித்து தீயை முழுமையாக அணைத்தனர். இந்த தீவிபத்து மின் கசிவு காரணமாக ஏற்பட்டதா?. அல்லது வேறு ஏதாவது காரணமா? என்று கூடுவாஞ்சேரி போலீசார் மற்றும் மறைமலைநகர் தீயணைப்பு அதிகாரிகள் விசாரித்து வருகின்றனர். இந்த தீ விபத்தில் குடோனில் இருந்த பொருட்கள் அனைத்தும் எரிந்து சாம்பல் ஆனது.
ஆய்வு செய்ய வேண்டும்
இது குறித்து அந்த பகுதி மக்கள் கூறுகையில்:-
எந்தவிதமான அரசு அனுமதியும் இன்றி திறந்தவெளி பகுதியில் இந்த பிளாஸ்டிக் குடோன் சில ஆண்டுகளாக இயங்கி வருகிறது. இந்த குடோனில் மழைகாலங்களில் கொசுக்கள் அதிக அளவில் உற்பத்தி ஆகிறது. ஆனால் எந்த அதிகாரிகளும் நடவடிக்கை எடுப்பது கிடையாது. திறந்தவெளியில் அரசு அனுமதியின்றி இயங்கும் குடோனில் மாவட்ட கலெக்டர் நேரில் வந்து ஆய்வு செய்ய வேண்டும்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.