அந்தேரியில் மாடியில் இருந்து இரும்பு கதவு விழுந்ததில் 2 பேர் பலி சாலையில் நடந்து சென்றபோது பரிதாபம்

அந்தேரியில் 6-வது மாடியில் இருந்து இரும்பு கதவு தவறி விழுந்ததில் சாலையில் நடந்து சென்ற 2 பேர் பலியானார்கள்.;

Update: 2018-10-27 23:30 GMT
மும்பை, 

அந்தேரியில் 6-வது மாடியில் இருந்து இரும்பு கதவு தவறி விழுந்ததில் சாலையில் நடந்து சென்ற 2 பேர் பலியானார்கள்.

இரும்பு கதவு விழுந்தது

மும்பை அந்தேரி மேற்கு சாத் பங்களா அருகே உள்ள சாகர் கனியா என்ற கட்டிடத்தின் 6-வது மாடியில் நேற்று இரும்பு கதவு பொருத்தும் பணி நடந்து வந்தது. இந்த பணியில் தொழிலாளிகள் ஈடுபட்டு இருந்தனர்.

இந்தநிலையில், திடீரென அந்த இரும்பு கதவு தொழிலாளர்களின் கையில் இருந்து நழுவி கீழே விழுந்தது. அப்போது அந்த கட்டிடத்தின் அருகே சாலையில் நடந்து சென்று கொண்டிருந்த 2 பேர் மீது, இரும்பு கதவு விழுந்து அமுக்கியது. இதில் இருவரும் படுகாயம் அடைந்து உயிருக்கு போராடினர்.

2 பேர் சாவு

இது பற்றி தகவல் அறிந்த வெர்சோவா போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று காயமடைந்த 2 பேரையும் மீட்டு அருகில் உள்ள மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி 2 பேரும் பரிதாபமாக உயிரிழந்தனர். இதையடுத்து போலீசார் 2 பேரின் உடல்களையும் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.

இருவரும் யார்? எந்த பகுதியை சேர்ந்தவர்கள்? என்றவிவரங்கள் உடனடியாக தெரியவில்லை. சம்பவம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் செய்திகள்