சத்துணவு ஊழியர்கள் 3-வது நாளாக போராட்டம் தாசில்தார் அலுவலக வளாகத்தில் சமைத்து சாப்பிட்டனர்

சத்துணவு ஊழியர் சங்கம் சார்பில் நேற்றும் 3-வது நாளாக போராட்டம் தொடர்ந்தது.

Update: 2018-10-27 22:28 GMT
திருவள்ளூர், 

தமிழ்நாடு சத்துணவு ஊழியர் சங்கம் சார்பில் சத்துணவு ஊழியர்கள் அனைவருக்கும் காலமுறை ஊதியம் வழங்க வேண்டும், குடும்ப பாதுகாப்புடன் கூடிய ஓய்வூதியம் ரூ.9 ஆயிரம் வழங்க வேண்டும், ஓய்வூதிய பணப்பயன் அமைப்பாளருக்கு ரூ.5 லட்சம், சமையலர் உதவியாளர்களுக்கு ரூ.3 லட்சம் வழங்க வேண்டும், விலைவாசி உயர்வுக்கு ஏற்ப உணவு மானிய செலவை வழங்க வேண்டும் என்பது போன்ற 4 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி கடந்த 25-ந்தேதியன்று திருவள்ளூர் கலெக்டர் அலுவலகம் முன்பு காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். போராட்டத்தில் ஈடுபட்டதாக 200 பெண்கள் உட்பட 330 பேரை கைது செய்து திருவள்ளூரில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் தங்க வைத்தனர். மாலையில் அனைவரையும் விடுவித்தனர். இருப்பினும் அவர்கள் வீட்டுக்கு செல்லாமல் திருவள்ளூரில் உள்ள தாசில்தார் அலுவலக வளாகத்தில் பந்தல் அமைத்து இரவு அங்கேயே தங்கி தங்களது போராட்டத்தை தொடர்ந்தார்கள். நேற்றும் அவர்களது போராட்டம் 3-வது நாளாக தொடர்ந்தது. இந்த போராட்டத்தை தமிழ்நாடு சத்துணவு ஊழியர் சங்கத்தின் மாநில தலைவர் சுந்தரம்மாள், மாநில பொதுச்செயலாளர் நூர்ஜகான் ஆகியோர் தலைமை தாங்கி தொடங்கி வைத்து பேசினார்கள். இதில் ஏராளமான சத்துணவு ஊழியர்கள் கலந்து கொண்டனர். அப்போது அவர்கள் தாசில்தார் அலுவலக வளாகத்தில் சமைத்து சாப்பிட்டனர். தங்களது கோரிக்கைகள் நிறைவேறும் வரை தொடர்ந்து போராட்டம் நடைபெறும் என்று அவர்கள் தெரிவித்தனர்.

மேலும் செய்திகள்