பராமரிப்பு பணி காரணமாக மெயின் வழித்தடத்தில் மின்சார ரெயில் போக்குவரத்தில் மாற்றம் டிரான்ஸ்ஹார்பரில் சேவைகள் ரத்து
பராமரிப்பு பணி காரணமாக மெயின் வழித்தடத்தில் மின்சார ரெயில் போக்குவரத்தில் மாற்றம் செய்யப்பட்டு உள்ளது.
மும்பை,
பராமரிப்பு பணி காரணமாக மெயின் வழித்தடத்தில் மின்சார ரெயில் போக்குவரத்தில் மாற்றம் செய்யப்பட்டு உள்ளது. டிரான்ஸ்ஹார்பர் வழித்தடத்தில் சேவைகள் ரத்து செய்யப்பட்டு உள்ளன.
பராமரிப்பு பணி
மத்திய ரெயில்வேயின் மெயின் வழித்தடத்தில் உள்ள முல்லுண்டு - மாட்டுங்கா இடையே விரைவு வழித்தடத்தில் இன்று (ஞாயிற்றுக்கிழமை) காலை 11.15 மணி முதல் பிற்பகல் 3.45 மணி வரை பராமரிப்பு பணி நடக்கிறது.
இதன் காரணமாக கல்யாணில் இருந்து சி.எஸ்.எம்.டி செல்லும் விரைவு மின்சார ரெயில்கள் காலை 10.37 மணி முதல் பிற்பகல் 3.06 மணி வரை திவா - பரேல் இடையே ஸ்லோ வழித்தடத்தில் திருப்பி விடப்படும்.
இந்த ரெயில்கள் இவ்விரு ரெயில் நிலையங்களுக்கு இடையே உள்ள அனைத்து ரெயில் நிலையங்களிலும் நின்று செல்லும். பரேலில் இருந்து மீண்டும் விரைவு வழித்தடத்தில் திருப்பி விடப்படும்.
சேவைகள் ரத்து
இதேபோல சி.எஸ்.எம்.டி.யில் இருந்து கல்யாண் செல்லும் விரைவு மின்சார ரெயில்கள் காலை 10.05 மணி முதல் பிற்பகல் 3.22 மணி வரை காட்கோபர், விக்ரோலி, பாண்டுப், முல்லுண்டு, திவா மற்றும் வழக்கமான ரெயில் நிலையங்களில் நின்று செல்லும்.
டிரான்ஸ்ஹார்பர் வழித்தடத்தில் தானே - வாஷி இடையே காலை 11.10 மணி முதல் பிற்பகல் 3.40 மணி வரை பராமரிப்பு பணி நடக்கிறது.
இதன் காரணமாக தானே - வாஷி, நெருல், பன்வெல் இடையே ரெயில் சேவைகள் ரத்து செய்யப்பட்டு உள்ளன.
வழக்கம் போல்இயங்கும்
துறைமுக வழித்தடம் மற்றும் மேற்கு ரெயில்வே வழித்தடத்தில் வாராந்திர பராமரிப்பு பணி நடைபெறாது. எனவே இவ்விரு வழித்தடங்களிலும் மின்சார ரெயில்கள் வழக்கம் போல் இயங்கும்.
இந்த தகவல்கள் மத்திய மற்றும் மேற்கு ரெயில்வே வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.