வங்கி பெண் ஊழியர்-அரசு டாக்டரிடம் 57½ பவுன் நகைகள் திருட்டு சென்னை வந்த ரெயிலில் ஆந்திர திருடர்கள் கைவரிசை

சென்னை வந்த ரெயிலில் ஆந்திர திருடர்கள் வங்கி பெண் ஊழியர் மற்றும் அரசு டாக்டரிடம் 57½ பவுன் நகைகளை திருடி சென்றனர். அவர்களை போலீசார் தேடி வருகிறார்கள்.;

Update:2018-10-28 03:43 IST
சென்னை,

ஐதராபாத்தை சேர்ந்தவர் பி.வி.ராஜூ. இவரது மனைவி லட்சுமி (வயது 58). இவர் ஐதராபாத்தில் உள்ள தனியார் வங்கியில் ஊழியராக உள்ளார். நேற்று முன்தினம் லட்சுமி தனது கணவருடன் நண்பர் வீட்டு திருமணத்தில் கலந்துகொள்ள சார்மினார் எக்ஸ்பிரஸ் ரெயில் மூலம் சென்னைக்கு புறப்பட்டார். ஐதராபாத்தில் இருந்து ரெயில் புறப்பட்ட சிறிது நேரத்தில் இருவரும் தூங்க சென்றனர்.

பின்னர் கூடூர் ரெயில் நிலையம் அருகே லட்சுமி எழுந்து பார்த்தபோது அவரது பையும், அதில் இருந்த 40 பவுன் நகை மற்றும் செல்போன் உள்ளிட்ட ரூ.10 லட்சம் மதிப்பிலான பொருட்கள் திருட்டுபோனது தெரியவந்தது.

இதையடுத்து நேற்று சென்னை வந்த லட்சுமி, இது குறித்து சென்டிரல் ரெயில்வே போலீசாரிடம் புகார் அளித்தார்.

அரசு டாக்டரிடம் 17½ பவுன்

ஆந்திரா மாநிலம் சமல்காட் பகுதியை சேர்ந்தவர் பரக் குமார் (53). இவர் அங்குள்ள அரசு மருத்துவமனையில் டாக்டராக உள்ளார். நேற்று முன்தினம் விசாகப்பட்டினம் வாராந்திர ரெயில் மூலம் பரக்குமார் மற்றும் அவரது மனைவி சென்னைக்கு புறப்பட்டனர்.

ரெயில் கூடூர் அருகே வந்தபோது பரக்குமார் ரெயிலில் கழிப்பறைக்கு சென்றார். பின்னர் வந்து பார்த்தபோது தான் வைத்திருந்த பையும், அதில் இருந்த 17½ பவுன் தங்க நகை உள்ளிட்ட ரூ.17 லட்சம் மதிப்பிலான பொருட்களும் திருட்டுபோனது தெரியவந்தது.

இதுகுறித்து பரக்குமார் சென்னை சென்டிரல் ரெயில்வே போலீசாரிடம் நேற்று புகார் அளித்தார்.

லட்சுமி மற்றும் பரக்குமாரின் புகாரின் அடிப்படையில் தனித்தனியாக வழக்குப்பதிவு செய்த சென்டிரல் ரெயில்வே போலீஸ் இன்ஸ்பெக்டர் முத்துகுமார், இந்த சம்பவம் நடைபெற்றது ஆந்திரா என்பதால், இது குறித்து ஆந்திரா போலீசாரிடம் தகவல் தெரிவித்து வழக்கை ஆந்திராவுக்கு மாற்றம் செய்தார்.

மேலும் செய்திகள்