நடப்பு ஆண்டில் பள்ளி கல்வித்துறைக்கு ரூ.27 ஆயிரத்து 208 கோடி ஒதுக்கீடு அமைச்சர் காமராஜ் தகவல்

பள்ளிக்கல்வித்துறைக்கு நடப்பு ஆண்டில் ரூ.27 ஆயிரத்து 208 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது என திருவாரூரில் நடந்த அறிவியல் கண்காட்சியில் அமைச்சர் ஆர்.காமராஜ் கூறினார்.

Update: 2018-10-27 22:45 GMT
திருவாரூர்,
பள்ளி கல்வித்துறை சார்பில் திருவாரூர் மாவட்ட அளவிலான அறிவியல் கண்காட்சி வ.சோ. ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் நேற்று நடந்தது. கண்காட்சிக்கு மாவட்ட கலெக்டர் நிர்மல்ராஜ் தலைமை தாங்கினார். உணவுத்துறை அமைச்சர் ஆர்.காமராஜ் கலந்து கொண்டு கண்காட்சியை தொடங்கி வைத்து பார்வையிட்டார். அப்போது அவர் பேசியதாவது:-

அறிவியல் கண்காட்சி மூலம் மாணவர்களின் படைப்பாற்றல் திறனை வளர்த்து கொள்ள வேண்டும். எப்படி, எதற்கு, ஏன் என்ற கேள்வியை எழுப்பினால் தான் விடை கிடைக்கும். வாழ்க்கையில் தேடுதல் இருக்க வேண்டும். அவ்வாறு தேடுதலில் கிடைக்கின்றதில் தேவையானதை நீங்கள் எடுத்து கொண்டு வாழ்க்கையில் முன்னேற வேண்டும்.

விலையில்லா சீருடை, விலையில்லா சைக்கிள், விலையில்லா மடிக்கணினி ஆகியவற்றை தமிழக அரசு வழங்கி வருகிறது. நடப்பு ஆண்டில் பள்ளி கல்வித்துறைக்கு ரூ.27 ஆயிரத்து 208 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. அதேபோல் கடந்த 5 ஆண்டு கால ஆட்சியில் ரூ.1 லட்சம் கோடி கல்வித்துறைக்கான நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. இவ்வாறு அமைச்சர் கூறினார்.

அறிவியல் கண்காட்சியில் 197 பள்ளிகளை சேர்ந்த 750 மாணவ-மாணவிகள் விவசாயம், சுகாதாரம் மற்றும் தூய்மை பணிகள், வள மேலாண்மை, கழிவு மேலாண்மை, போக்குவரத்து மற்றும் தகவல் தொடர்பு சாதனங்கள், கணித மாதிரிகள் என 6 தலைப்புகளில் 374 படைப்புகளை கண்காட்சியில் காட்சிப்படுத்தினர்.

இதில் மாவட்ட வருவாய் அதிகாரி சக்திமணி, முதன்மை கல்வி அலுவலர் மாரிமுத்து, உதவி கலெக்டர் முருகதாஸ், மாவட்ட அறிவியல் ஒருங்கிணைப்பாளர் பாலு, பள்ளியின் தாளாளர் வடுகநாதன், தலைமை ஆசிரியர் ஜீவானந்தம் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

மேலும் செய்திகள்