ஆவணங்கள் இன்றி பள்ளி மாணவர்களை ஏற்றி வந்த ஆட்டோ- 2 வேன்கள் பறிமுதல்
திருத்துறைப்பூண்டியில் ஆவணங்கள் இன்றி பள்ளி மாணவர்களை ஏற்றி வந்த ஆட்டோ- 2 வேன்கள் பறிமுதல் செய்யப்பட்டன.
திருத்துறைப்பூண்டி பகுதியில் உரிய ஆவணங்கள் இன்றியும் நிர்ணயிக்கப்பட்ட அளவை விட வேன், மற்றும் ஆட்டோக்களில் கூடுதலாக பள்ளி மாணவர்கள் ஏற்றப் படுவதாக வட்டார போக்கு வரத்து அலுவலர் செந்தில் குமாருக்கு பல்வேறு புகார்கள் வந்தன.
இதை தொடர்ந்து அவர் உத்தரவின் பேரில் திருத்துறைப்பூண்டி புதிய பஸ் நிலையம் பகுதியில் வட்டார மோட்டார் வாகன ஆய்வாளர் கருப்பண்ணன் தலைமையில் அதிகாரிகள் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அந்த வழியாக உரிய ஆவணங்கள் இன்றி பள்ளி மாணவர்களை ஏற்றி வந்த 2 வேன்கள் பறிமுதல் செய்யப்பட்டன.
இதைப்போல உரிய ஆவணம் இன்றி இயக்கப்பட்ட ஒரு ஆட்டோவும் பறிமுதல் செய்யப்பட்டு திருத் துறைப்பூண்டி போலீஸ் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டது. இது குறித்து திருத்துறைப்பூண்டி போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.