மணல் கடத்திய லாரியை விடுவிக்க லஞ்சம்: ஓய்வுபெற்ற தாசில்தாருக்கு 3 ஆண்டுகள் சிறை சிவமொக்கா கோர்ட்டு தீர்ப்பு
மணல் கடத்திய லாரியை விடுவிக்க லஞ்சம் வாங்கிய வழக்கில் ஓய்வுபெற்ற தாசில்தாருக்கு 3 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதித்து சிவமொக்கா கோர்ட்டு தீர்ப்பு வழங்கியது.
சிவமொக்கா,
மணல் கடத்திய லாரியை விடுவிக்க லஞ்சம் வாங்கிய வழக்கில் ஓய்வுபெற்ற தாசில்தாருக்கு 3 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதித்து சிவமொக்கா கோர்ட்டு தீர்ப்பு வழங்கியது.
ரூ.10 ஆயிரம் லஞ்சம்
சிவமொக்கா மாவட்டம் தீர்த்தஹள்ளியை சேர்ந்தவர் கேசவராஜ். ஓய்வுபெற்ற தாசில்தார். முன்னதாக கடந்த 2009-ம் ஆண்டு கேசவராஜ் தாசில்தாராக பணியாற்றிய போது தீர்த்தஹள்ளி தாலுகா ரஞ்தகட்டே பகுதியில் போலீசாருடன் இணைந்து வாகன சோதனையில் ஈடுபட்டார். அப்போது அந்த வழியாக மணல் கடத்தி வந்த லாரியை கேசவராஜ் பறிமுதல் செய்தார்.
இந்த நிலையில் பறிமுதல் செய்யப்பட்ட லாரியை விடுவிக்கும்படி கேசவராஜிடம், லாரியின் உரிமையாளர் பாஸ்கர்ஷெட்டி என்பவர் கேட்டு கொண்டார். அப்போது லாரியை விடுவிக்க ரூ.10 ஆயிரம் லஞ்சம் தரும்படி பாஸ்கர்ஷெட்டியிடம், கேசவராஜ் கேட்டதாக தெரிகிறது.
3 ஆண்டுகள் சிறை
ஆனால் லஞ்சம் கொடுக்க விரும்பாத பாஸ்கர்ஷெட்டி ஊழல் தடுப்பு படையில் கேசவராஜ் மீது புகார் அளித்தார். அவருக்கு சில அறிவுரைகள் வழங்கிய ஊழல் தடுப்பு படை ரூ.10 ஆயிரத்தை கொடுத்து அனுப்பினர். இந்த நிலையில் கேசவராஜை சந்தித்த பாஸ்கர் ஷெட்டி ரூ.10 ஆயிரம் லஞ்சத்தை கொடுத்தார். அப்போது அங்கு மறைந்து இருந்த ஊழல் தடுப்பு படை அதிகாரிகள் அவரை கைது செய்தனர். பின்னர் அவர் மீது சிவமொக்கா கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தனர். இந்த வழக்கின் விசாரணை முடிந்த நிலையில் நேற்று காலை நீதிபதி நடராஜ் தீர்ப்பு வழங்கினார். அதில் கேசவராஜிக்கு 3 ஆண்டுகள் சிறைத்தண்டனையும், ரூ.20 ஆயிரம் அபராதமும் விதித்தார்.