12 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி கிராம நிர்வாக அலுவலர்கள் ஆர்ப்பாட்டம் நாகையில் நடந்தது
நாகையில் 12 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி கிராம நிர்வாக அலுவலர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
நாகப்பட்டினம்,
தமிழ்நாடு கிராம நிர்வாக அலுவலர் முன்னேற்ற சங்கத்தின் சார்பில் நாகையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்திற்கு மாவட்ட தலைவர் குபேந்திரன் தலைமை தாங்கினார். மாவட்ட செயலாளர் வீரமணியன், சீர்காழி வட்ட தலைவர் வெங்கடேசன், தரங்கம்பாடி வட்ட செயலாளர் ராஜா ஆகியோர் முன்னிலை வகித்தனர். முன்னதாக குத்தாலம் வட்ட தலைவர் ஜார்ஜ் பெர்னாண்டஸ் வரவேற்றார். சீர்காழி வட்ட செயலாளர் அருள்பெருமாள், மாவட்ட இணை செயலாளர் செந்தில்நாதன் ஆகியோர் பேசினர்.
பேரிடர் மேலாண்மை பணிகளில் ஈடுபடும் கிராம நிர்வாக அலுவலர்களுக்கு தனி ஊதியம் வழங்க வேண்டும். கருணை அடிப்படையில் பணி நியமனம் செய்யப்படும் கிராம நிர்வாக அலுவலர்களுக்கு பணிவரன்முறை வழங்க வேண்டும். கூடுதல் பணி செய்யும் காலம் முழுமைக்கும் பொறுப்பூதியம் வழங்க வேண்டும்.
பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்திட வேண்டும். 21 மாத ஊதிய உயர்வு நிலுவை தொகை உடனடியாக வழங்க வேண்டும். நகர ஆய்வு மற்றும் உட்பிரிவு பட்டா மாறுதல் ஆகியவற்றில் கிராம நிர்வாக அலுவலர்களின் பரிந்துரையை நடைமுறைபடுத்த வேண்டும். அம்மா திட்ட செலவின நிலுவை தொகை மற்றும் இணையதள செலவின நிலுவை தொகையை உடனடியாக வழங்க வேண்டும்.
மடிக்கணினி வழங்கப்படாத அனைத்து கிராம நிர்வாக அலுவலர்களுக்கும் உடனடியாக மடிக்கணினி வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட 12 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டத்தில் கோஷங்கள் எழுப்பப்பட்டன. இதில் கிராம நிர்வாக அலுவலர்கள் பலர் கலந்துகொண்டனர். முடிவில் மாவட்ட பொருளாளர் மணிகண்டன் நன்றி கூறினார்.