பாலக்கோடு அருகே சரக்கு ஆட்டோ கவிழ்ந்து 22 பெண்கள் காயம்

பாலக்கோடு அருகே சரக்கு ஆட்டோ கவிழ்ந்து 22 பெண்கள் காயம் அடைந்தனர்.

Update: 2018-10-27 21:45 GMT
பாலக்கோடு,

தர்மபுரி மாவட்டம் மாரண்டஅள்ளி அருகே உள்ள சென்னப்பன்கொட்டாய் கிராமத்தை சேர்ந்த 30 பெண்கள் கூலி வேலைக்காக கிருஷ்ணகிரி மாவட்டம் ராயக்கோட்டைக்கு நேற்று சரக்கு ஆட்டோவில் சென்றனர். அங்கு வேலையை முடித்து விட்டு மாலை மீண்டும் சரக்கு ஆட்டோவில் ஊருக்கு திரும்பி கொண்டிருந்தனர். இதனை பொப்பிடி கிராமத்தை சேர்ந்த டிரைவர் குமார் (வயது 25) என்பவர் ஓட்டி சென்றார்.

பாலக்கோடு அருகே உள்ள 5-வது மைல்கல் என்ற இடத்தில் சரக்கு ஆட்டோ வந்து கொண்டிருந்தது. அப்போது எதிர்பாராதவிதமாக சாலை ஓரத்தில் இருந்த பள்ளத்தில் சரக்கு ஆட்டோ கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.

இதில் சரக்கு ஆட்டோவில் இருந்த மங்கம்மாள், அம்சு, புனிதா, முனியம்மாள், முருகம்மாள், நாகரத்தினம் (25) உள்பட 22 பெண்கள் காயம் அடைந்தனர். இதைப் பார்த்து அதிர்ச்சி அடைந்த அக்கம்பக்கத்தினர் அங்கு ஓடி சென்று காயம் அடைந்தவர்களை மீட்டு சிகிச்சைக்காக பாலக்கோடு அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதில் நாகரத்தினம் 6 மாத கர்ப்பிணியாக உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த விபத்து குறித்து மாரண்டஅள்ளி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். சரக்கு ஆட்டோ கவிழ்ந்து 22 பெண்கள் காயம் அடைந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

மேலும் செய்திகள்