சவ ஊர்வலத்தில் பட்டாசு வெடித்ததில் நடந்த பிரச்சினையால் கோஷ்டி மோதல் - 6 பேர் கைது

சவ ஊர்வலத்தில் பட்டாசு வெடித்ததில் நடந்த கோஷ்டி மோதல் காரணமாக 6 பேர் கைது செய்யப்பட்டனர்.

Update: 2018-10-27 22:30 GMT
தண்டராம்பட்டு,

சவ ஊர்வலத்தில் பட்டாசு வெடித்ததால் இருதரப்பினர் இடையே பயங்கர கோஷ்டி மோதல் ஏற்பட்டது. இதில் காயம் அடைந்தவர்கள் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர்.

தண்டராம்பட்டு அருகில் உள்ள சாத்தனூரை சேர்ந்த ஒருவர் இறந்து விட்டார். இறுதிச்சடங்குகள் முடிந்தபின் நேற்று முன்தினம் சவ ஊர்வலம் நடந்தது. அப்போது அந்த ஊர்வலத்தில் பட்டாசு வெடித்தது தொடர்பாக அதே ஊர் அம்பேத்கர் காலனியை சேர்ந்த சின்னப்பையன் மனைவி ரம்பா (வயது 35) என்பவருக்கும், புதிய காலனியை சேர்ந்த கணேசன் மகன் ஏழுமலை (30) என்பவருக்கும் இடையே பிரச்சினை ஏற்பட்டது. அவர்களுக்கிடையே ஏற்பட்ட வாய்த்தகராறு முற்றி மோதல் ஏற்பட்டது.

இதில் ஏழுமலை மற்றும் அவரது உறவினர்கள் அருண், ராஜவேல், அப்பு, பாபு, வேடியப்பன், முருகேசன், கணேசன் ஆகிய 8 பேரும் சேர்ந்து கத்தி, கல் மற்றும் சோடா பாட்டிலால் ரம்பாவையும் அவரது உறவினர்களையும் சரமாரியாக தாக்கி உள்ளனர். மேலும் கொலை மிரட்டல் விடுத்ததாகவும் கூறப்படுகிறது. அதேபோல் ரம்பாவும், அவரது உறவினர்கள் சிவராமன், சவுந்தர், ஸ்ரீதர், சத்தீஷ், வேலாயுதம், சின்னப்பையன் ஆகிய 7 பேரும் ஏழுமலை குடும்பத்தினரை தாக்கியதாக தெரிகிறது. இதில் இருதரப்பையும் சேர்ந்தவர்கள் காயம் அடைந்தனர். இந்த கோஷ்டி மோதலால் சாத்தனூரில் பதற்றம் நிலவி வருகிறது.

சம்பவம் குறித்து இருதரப்பினரும் சாத்தனூர் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தனர். அது குறித்து போலீஸ் சப்- இன்ஸ்பெக்டர் சேகர் வழக்குப்பதிவு செய்து ஏழுமலை தரப்பில் அப்பு, பாபு, வேடியப்பன் ஆகியோரும், ரம்பா தரப்பில் சிவராமன், சவுந்தர், வேலாயுதம் ஆகியோரும் என 6 பேரை கைது செய்தார். தொடர்ந்து இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் செய்திகள்