நொய்யல் ஆற்றில் கலக்கும் சாயக்கழிவால் விளைநிலங்கள் பாதிப்பு நடவடிக்கை எடுக்க விவசாயிகள் வலியுறுத்தல்

நொய்யல் ஆற்றில் கலக்கும் சாயக்கழிவால் விளைநிலங்கள் பாதிக்கப்படுகிறது. எனவே இதுகுறித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று விவசாயிகள் வலியுறுத்தி வருகின்றனர்.

Update: 2018-10-27 22:45 GMT
நொய்யல்,

நொய்யல் ஆறு கோவை மாவட்டத்தில் தொடங்கி திருப்பூர் வழியாக கரூர் மாவட்டம், நொய்யல் செல்லாண்டியம்மன் கோவில் வழியாக சென்று காவிரியில் கலக்கிறது.

திருப்பூர் பகுதியை சேர்ந்த சாயப்பட்டறை அதிபர்கள் ஒவ்வொரு முறையும் நொய்யல் ஆற்றில் மழைநீர் வரும்போது அதனுடன் தேக்கி வைத்திருந்த சாயப்பட்டறை கழிவுநீரை கலந்து விடுவது வழக்கம்.

இந்நிலையில் கடந்த சில நாட்களாக கோவை மற்றும் திருப்பூர் மாவட்டங்களில் பெய்த கனமழையால் நொய்யல் ஆற்றில் மழைநீர் அதிகளவில் வந்து கொண்டிருக் கிறது. இதை பயன்படுத்தி திருப்பூர் பகுதிகளை சேர்ந்த சாயப்பட்டறை அதிபர்கள் சாயக்கழிவு நீரை நொய்யல் ஆற்றில் திறந்து விட்டுள்ளனர். இதனால் நொய்யல் ஆற்றில் வரும் மழைநீர் கரும்பச்சை நிறத்தில் வருகிறது. தற்போது மேட்டூர் அணையிலிருந்து காவிரி ஆற்றில் தண்ணீர் வருவதால், அதனுடன் நொய்யல் ஆற்றின் சாயக் கழிவு நீரும் கலக்கிறது.

நொய்யல் ஆற்றில் இருந்து பாசனம் செய்யும் விவசாயிகள் இந்த தண்ணீரை பயன்படுத்துவதால் விவசாயப்பயிர்கள் கருகும் நிலை ஏற்பட்டுள்ளது. அதேபோல் நொய்யல் ஆற்றை ஒட்டியுள்ள கிணறு மற்றும் ஆழ்துளைக் கிணறுகளில் உள்ள தண்ணீரும் சாயக்கழிவு நீரால் மாசுபட்டுள்ளது. காவிரி ஆற்றில் பொதுமக்கள் குளித்து செல்லும்போது உடலில் அரிப்பு ஏற்படுவதாக கூறுகின்றனர். நொய்யல் ஆற்றுத் தண்ணீரை பரிசோதனை செய்தபோது உப்பின் தன்மை அதிக அளவில் உள்ளது என நொய்யல் பாசன விவசாயிகள் சங்க தலைவர் நொய்யல் ராமசாமி தெரிவித்தார்.

எனவே மாவட்ட கலெக்டர் அன்பழகன் மற்றும் மாசுக்கட்டுப்பாட்டு வாரிய அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுத்து திருப்பூர் சாயக்கழிவு நீர் நொய்யல் ஆற்றில் கலப்பதை தடுக்க வேண்டும் என நொய்யல் சுற்றுவட்டாரப்பகுதி விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் வலியுறுத்தி வருகின்றனர்.

மேலும் செய்திகள்