கடலூர் அரசு சித்த மருத்துவமனையில் மருந்துகள் தட்டுப்பாடு நோயாளிகள் கடும் அவதி
கடலூர் அரசு சித்த மருத்துவமனையில் மருந்துகளுக்கு தட்டுபாடு ஏற்பட்டுள்ளதால் நோயாளிகள் கடும் அவதிப்பட்டு வருகிறார்கள்.
கடலூர் மாவட்ட அரசு தலைமை மருத்துவமனை வளாகத்தில் அரசு சித்த மருத்துவமனை உள்ளது. இங்கு தினமும் காலை 8 மணி முதல் பகல் 12 மணிவரையிலும், மதியம் 3 மணி முதல் மாலை 5 மணிவரையிலும் நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்கப்படுகிறது. சிகிச்சைக்காக கடலூர் மாவட்டம் முழுவதிலும் இருந்து தினமும் 200 முதல் 300 நோயாளிகள் வரை வந்து செல்கிறார்கள்.
தற்போது டெங்கு காய்ச்சல் பரவுவதால் நோயாளிகள் வருகை அதிகரித்து உள்ளது. ஆனால் சித்த மருத்துவமனையில் மருந்து, மாத்திரைகளுக்கு தட்டுப்பாடு உள்ளது. இதனால் சிகிச்சைக்காக வரும் நோயாளிகளுக்கு ஒரு சில மருந்துகள் மட்டுமே குறைந்த அளவில் தரப்படுகிறது.
அதேப்போல நேற்றும் சிகிச்சைக்காக வந்த நோயாளிகளில் ஒரு சிலருக்கு மட்டும் மருந்து, மாத்திரைகள் குறைந்த அளவில் வழங்கப்பட்டது. ஓரளவு வசதி படைத்தவர்கள் மருந்து சீட்டுகளை எடுத்துக்கொண்டு தனியார் மருந்து கடைகளுக்கு சென்று மருந்து வாங்கினர். ஆனால் சாதாரண, ஏழை, எளிய நோயாளிகள் ஏமாற்றத்துடன் திரும்பி சென்றனர்.
கடலூர் மட்டுமின்றி பண்ருட்டி, சிதம்பரம், விருத்தாசலம் என மாவட்டம் முழுவதும் உள்ள அரசு சித்த மருத்துவமனைகளில் மருந்து மாத்திரைகளுக்கு தட்டுப்பாடு இருப்பதாகவும் கூறப்படுகிறது.
இது குறித்து பண்ருட்டியை சேர்ந்த நோயாளி ஒருவர் கூறும்போது, மாவட்டம் முழுவதும் 40 அரசு சித்த மருத்துவமனை இருப்பதாக சொல்கிறார்கள். இதில் பெரும்பாலான மருத்துவமனைகளில் போதுமான அளவில் மருந்து மாத்திரைகள் இருப்பு வைக்கப்படவில்லை. அப்படியே மருந்து மாத்திரைகள் இருந்தாலும் 2 நாள், 3 நாளுக்கு வழங்க வேண்டிய மாத்திரைகளை ஒரு நாளுக்கு மட்டுமே தருகிறார்கள்.
காய்ச்சலுக்கு மட்டும் நிலவேம்பு பொடி அல்லது கசாயம் கிடைக்கிறது. ஆனால் மற்ற நோய்களுக்குரிய சூரணம், பஸ்பம், லேகியம் உள்ளிட்ட மருந்து, மாத்திரைகள் வழங்கவில்லை. இதனால் டாக்டர் எழுதி கொடுக்கும் மருந்து சீட்டை எடுத்துக்கொண்டு தனியார் மருந்து கடைகளில் பணம் கொடுத்து மருந்து, மாத்திரைகளை வாங்கி வருகிறோம்.
எனவே மாவட்டத்தில் உள்ள அனைத்து சித்த மருத்துவமனைகளிலும் மருந்து, மாத்திரைகள் தட்டுப்பாடு இல்லாமல் வழங்க உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.