இனிப்புகளில் அதிகப்படியான வண்ணங்களை சேர்த்தால் நடவடிக்கை தயாரிப்பாளர்களுக்கு அதிகாரி எச்சரிக்கை

இனிப்புகளில் அதிகப்படியான வண்ணங்களை சேர்த்தால் நடவடிக்கை எடுக்கப்படும் என்று தயாரிப்பாளர்களுக்கு உணவு பாதுகாப்பு அதிகாரி எச்சரிக்கை விடுத்தார்.

Update: 2018-10-27 22:15 GMT
கடலூர் மாவட்ட உணவு பாதுகாப்புத்துறை சார்பில் கடலூர் நகர இனிப்பு மற்றும் காரம் தயாரிப்பாளர்கள், வியாபாரிகளுக்கான ஆலோசனை கூட்டம் கடலூரில் நடந்தது. கூட்டத்துக்கு கடலூர் மாவட்ட உணவு பாதுகாப்பு துறை நியமன அலுவலர் தட்சிணாமூர்த்தி தலைமை தாங்கி பேசியதாவது:-

தீபாவளி பண்டிகை நெருங்கி வரும் வேளையில் இனிப்பு, கார வகைகள் தயாரிக்கும் இடம் மற்றும் விற்கும் இடத்தை சுத்தமாக வைத்திருக்க வேண்டும். ஈக்கள் மொய்க்காத வகையில் தூய்மையாக வைக்க வேண்டும். ஒரு முறை பயன்படுத்திய எண்ணெயை மீண்டும், மீண்டும் சூடுபடுத்தி உபயோகிக்கக்கூடாது

இனிப்புகளில் சட்டத்தில் அனுமதிக்கப்பட்ட செயற்கை வண்ணங்களை சேர்க் கலாம். அதிகப்படியான வண்ணங்களை சேர்த்தால் நடவடிக்கை எடுக்கப்படும். மேலும் இனிப்பு, கார வகைகளை தயாரிக்க பயன்படுத்தப்படும் சமையல் எண்ணெய் மற்றும் நெய்யின் விவரங்களை தகவல் பலகையாக உணவு விற்பனை கூடத்தில் வைக்க வேண்டும். சுத்தமான தண்ணீரில் தான் பொருட்களை சுத்தம் செய்ய வேண்டும். இது போன்ற வழிகாட்டுதல்களை கடைபிடிக்காத பட்சத்தில் உணவு பாதுகாப்பு தர நிர்ணய சட்ட விதிகளின் படி சம்பந்தப்பட்டவர் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும்.

இவ்வாறு நியமன அலுவலர் தட்சிணாமூர்த்தி பேசினார்.

உணவு பாதுகாப்பு அலுவலர்கள் சந்திரசேகரன் (கடலூர்), நல்லதம்பி (புவனகிரி), சுப்பிரமணியன் (பண்ருட்டி) ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதில் கடலூர் நகர இனிப்பு மற்றும் காரம் தயாரிப்பாளர்கள், வியாபாரிகள் கலந்து கொண்டனர்.

மேலும் செய்திகள்