அரசு பஸ் டிரைவரை தாக்கியதை கண்டித்து போக்குவரத்து கழக ஊழியர்கள் போராட்டம்

சிவகாசி பஸ் நிலையத்தில் அரசு பஸ் டிரைவரை போலீசார் தாக்கியதை தொடர்ந்து போக்குவரத்து கழக ஊழியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

Update: 2018-10-27 23:00 GMT

சிவகாசி,

சிவகாசி பஸ் நிலையத்தில் அரசு விழா நடைபெற்றது. இந்த விழா பாதுகாப்பு பணிக்காக 50–க்கும் மேற்பட்ட போலீசார் பஸ் நிலையத்தை சுற்றி நிறுத்தப்பட்டிருந்தனர். அப்போது மதுரையில் இருந்து ஒரு அரசு பஸ் சிவகாசி பஸ் நிலையம் அருகில் வந்தது. பஸ்சை உசிலம்பட்டியை சேர்ந்த டிரைவர் சிவக்குமார் ஓட்டி வந்தார். அவர் பஸ் நிலையத்துக்குள் நுழையும்போது எதிர்பாராமல் அந்த பகுதியில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த சிறப்பு சப்–இன்ஸ்பெக்டர் ராஜாராம் மீது மோதியதாக கூறப்படுகிறது. இதில் அவருக்கு காயம் ஏற்பட்டது. உடனே அருகில் இருந்தவர்கள் அவரை மீட்டு தனியார் ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்த்தனர்.

இந்த விபத்து நடந்த நேரத்தில் பஸ்சில் இருந்த டிரைவர் சிவக்குமார் கீழே இறங்கி வந்துள்ளார். அப்போது அவரை போலீசார் தாக்கிய கூறப்படுகிறது. இதுகுறித்து சக போக்குவரத்து கழக ஊழியர்களிடம் தெரிவித்துள்ளார். பின்னர் ஒட்டுமொத்த போக்குவரத்து கழக ஊழியர்களும் போராட்டத்தில் ஈடுபட முடிவு செய்து பஸ் நிலையத்துக்குள் திரண்டனர்.

இதனால் பஸ்கள் ஏதும் வெளியே செல்லவில்லை. சில அரசு போக்குவரத்து கழக டிரைவர்கள் பஸ்களை பஸ் நிலைய வாசல்களை மறித்து நிறுத்தி இருந்தனர். இதனால் வெளியில் இருந்து பஸ்கள் எதுவும் பஸ் நிலையத்துக்குள் வரமுடியாமல் சாலைகளில் நிறுத்தப்பட்டது. சுமார் 1 மணி நேரம் இந்த போராட்டம் நடைபெற்றதால் பஸ் நிலையத்தை சுற்றி உள்ள சாலைகளில் வாகனங்கள் நீண்ட தூரம் வரிசையாக நின்றது. இதனால் சாத்தூர், ஸ்ரீவில்லிபுத்தூர் ரோடு போக்குவரத்து நெரிசலால் திணறியது.

இதைதொடர்ந்து சப்–இன்ஸ்பெக்டர் காசியம்மாள் மற்றும் போலீசார் போராட்டத்தில் ஈடுபட்ட போக்குவரத்து கழக ஊழியர்களிடம் பேச்சு வார்த்தை நடத்தினர். அப்போது போக்குவரத்துகழக ஊழியர்களும், போலீசாருக்கும் இடையே கடும் வாக்கு–வாதம் ஏற்பட்டது.

பின்னர் போக்குவரத்து கழக முக்கிய நிர்வாகிகள் சிவகாசி டவுன் போலீஸ் நிலையத்துக்கு அழைத்து செல்லப்பட்டு அங்கு மீண்டும் பேச்சு வார்த்தை நடத்தப்பட்டது. அங்கு சமாதானம் ஏற்பட்டது. அதன் பின்னர் போக்குவரத்து கழக ஊழியர்கள் போராட்டத்தை கைவிட்டனர். போக்குவரத்து கழக ஊழியர்களின் திடீர் போராட்டத்தால் வாகன ஓட்டிகளும், பொதுமக்களும், பயணிகளும் பாதிக்கப்பட்டனர்.

மேலும் செய்திகள்