பாதயாத்திரை பக்தர்கள் நலனுக்காக விபத்து நடக்கும் இடங்களில் தடுப்புகள் ஆலோசனை கூட்டத்தில் முடிவு
பழனிக்கு செல்லும் பாதயாத்திரை பக்தர்களின் நலனுக்காக விபத்து நடக்கும் இடங்களில் தடுப்புகளை வைக்க வேண்டும் என ஆலோசனை கூட்டத்தில் முடிவெடுக்கப்பட்டது.
கார்த்திகை மாதம் தொடங்கவுள்ளதை அடுத்து பழனிக்கு பக்தர்கள் வருகை அதிகம் இருக்கும். இதில் பாதயாத்திரையாக பக்தர்கள் அதிகம் வருவர். அவ்வாறு வரும் பக்தர்கள் விபத்துகளில் சிக்குவதை தடுக்க செய்ய வேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கை குறித்த ஆலோசனை கூட்டம் நேற்று பழனி தண்டபாணி நிலையத்தில் நடந்தது.
கூட்டத்துக்கு திருத்தொண்டர் சபை நிறுவனர் ராதாகிருஷ்ணன் தலைமை தாங்கினார். பழனி கோவில் துணை ஆணையர் செந்தில்குமார், தாசில்தார் ராஜேந்திரன், போலீஸ் துணை சூப்பிரண்டு விவேகானந்தன் உள்பட பலர் முன்னிலை வகித்தனர். கூட்டத்தில் பக்தர்கள் பாதுகாப்புக்காக செய்ய வேண்டிய நடவடிக்கைகள் குறித்து விவாதம் நடந்தது. அப்போது எடுக்கப்பட்ட முடிவுகள் விவரம் வருமாறு:-
பாதயாத்திரை தடங்களில் போலீஸ் சார்பில் தொடர்பு எண் அறிவிப்பு பலகை வைப்பது, பக்தர்களின் விவரங்களை அந்தந்த மாவட்ட போலீஸ் தலைமை அலுவலகங்களுக்கு தெரிவித்து, ஒருங்கிணைந்த பாதுகாப்பு நடவடிக்கை மேற்கொள்வது போன்ற பணிகளை போலீசார் மேற்கொள்ள வேண்டும். பக்தர்களுக்கு மருத்துவ உதவி மற்றும் தேசிய நெடுஞ்சாலை ஆணையம் மூலம் சாலையோர ஆக்கிரமிப்புகளை அகற்றி பாதயாத்திரை பக்தர்கள் செல்வதற்கான பாதைகளை பராமரிக்க வேண்டும். இரவில் போலீசார் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட வேண்டும்.
பக்தர்கள் செல்லும் பாதையில் பஸ்களை மெதுவாக இயக்க வேண்டும். அதிக விபத்துகள் நடந்துள்ள இடங்களில் தடுப்புகளை வைக்க வேண்டும். பழனி கோவில் நிர்வாகம், தொண்டு நிறுவனங்கள் மற்றும் வங்கிகள் மூலம் ஒளிரும் பட்டைகள், குச்சிகள் வழங்க வேண்டும். மேலும் அனைத்துத்துறை அதிகாரிகள் ஒருங்கிணைப்பு குழு அமைத்து பக்தர்களுக்கான அடிப்படை வசதிகளை ஏற்படுத்தி கொடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று முடிவெடுக்கப்பட்டது.