தேங்காய் வியாபாரி வீட்டில் 34 பவுன் நகை கொள்ளை பின்பக்க கதவை உடைத்து மர்ம நபர்கள் கைவரிசை

நாகர்கோவிலில் தேங்காய் வியாபாரி வீட்டில் பின்பக்க கதவை உடைத்து 34 பவுன் நகையை கொள்ளையடித்துச் சென்ற மர்ம நபர்களை போலீசார் தேடி வருகிறார்கள்.

Update: 2018-10-27 22:15 GMT
நாகர்கோவில்,

இந்த துணிகர சம்பவம் பற்றி போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது:-நாகர்கோவில் டி.வி.டி. காலனியை சேர்ந்தவர் ஆறுமுகம் (வயது 62). இவருக்கு உஷா என்ற மனைவியும், ஒரு மகன் மற்றும் ஒரு மகளும் உள்ளனர். மகன் வெளிநாட்டில் வசித்து வருகிறார். மகள் பெங்களூருவில் தங்கி உள்ளார். ஆறுமுகம், நாகர்கோவிலில் தேங்காய் வியாபாரம் செய்து வருகிறார்.

இந்த நிலையில் கணவன், மனைவி இருவரும் கடந்த 24-ந் தேதி வீட்டை பூட்டி விட்டு பெங்களூருவில் வசிக்கும் மகளை பார்ப்பதற்காக சென்றனர். இதனால் வீட்டில் யாரும் இல்லை.

நேற்று காலை மீண்டும் வீடு திரும்பிய அவர்களுக்கு அதிர்ச்சி காத்திருந்தது. அதாவது வீட்டின் பின்பக்க கதவு உடைக்கப்பட்டு திறந்திருந்தது. மேஜைகளும் திறக்கப்பட்டு இருந்தன. வீட்டில் இருந்த பொருட்கள் அனைத்தும் ஆங்காங்கே சிதறிக்கிடந்தன. மேலும் வீட்டில் இருந்த 3 பீரோக்களிலும் பூட்டு உடைப்பட்டு திறந்து கிடந்தன. அதில் ஒரு பீரோவில் ஆறுமுகம் வைத்திருந்த 34 பவுன் நகை மற்றும் ரூ.6 ஆயிரம் ஆகியவற்றை காணவில்லை. வீட்டில் ஆள் இல்லாததை நோட்டமிட்ட மர்ம நபர்கள் வீட்டுக்குள் புகுந்து நகை மற்றும் பணத்தை திருடிச் சென்றது தெரியவந்தது.

பின்னர் இதுபற்றி கோட்டார் போலீசுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன்பேரில் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் அருளப்பன் தலைமையிலான போலீசார் அங்கு விரைந்து வந்தனர். வீட்டில் அனைத்து இடங்களுக்கும் சென்று போலீசார் பார்வையிட்டனர். ஏதேனும் தடயங்களை மர்ம நபர்கள் விட்டுச் சென்றுள்ளனரா? என்றும் ஆய்வு செய்யப்பட்டது.

இதையடுத்து கைரேகை நிபுணர்கள் வரவழைக்கப்பட்டு மர்ம நபர்களின் ரேகைகள் பதிவு செய்யப்பட்டன. மோப்ப நாயும் வரவழைக்கப்பட்டது. வீட்டில் பல்வேறு இடங்களில் மோப்பம் பிடித்த அந்த நாய் வெளியே சிறிது தூரம் ஓடியது. ஆனால் யாரையும் கவ்விப்பிடிக்கவில்லை.

வீடு முழுவதும் சென்ற கொள்ளையர்கள் படுக்கை அறையை மட்டும் விட்டு வைத்துள்ளனர். ஏனென்றால் படுக்கை அறை கதவை திறக்க முயன்று முடியாமல் விட்டுள்ளனர். ஆறுமுகத்தின் வீடு இருக்கும் பகுதி அதிகமான குடியிருப்புகள் நிறைந்த இடம். ஆனாலும் மர்ம நபர்கள் துணிகரமாக செயல்பட்டு நகை, பணத்தை அள்ளிச் சென்றுள்ளனர்.

இதற்கிடையே வீட்டின் அருகே எங்கேனும் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டு இருக்கிறதா? என்று போலீசார் ஆய்வு செய்தனர். இந்த துணிகர கொள்ளை சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இந்த சம்பவத்தில் ஈடுபட்ட மர்ம நபர்களை போலீசார் வலைவீசி தேடி வருகிறார்கள்.

மேலும் செய்திகள்