காதல் தகராறில் மோதல்: தீபாவளி பட்டாசை வீசி, வெடிகுண்டு என மிரட்டிய வாலிபர்

கன்னியாகுமரி அருகே காதல் தகராறில் ஏற்பட்ட மோதலில், தீபாவளி பட்டாசை வீசிவிட்டு வெடிகுண்டு என மிரட்டிய வாலிபரால் பரபரப்பு ஏற்பட்டது.

Update: 2018-10-27 23:45 GMT
கன்னியாகுமரி,

கன்னியாகுமரி அருகே உள்ள பகுதியை சேர்ந்த ஒரு இளம்பெண்ணை, மாதவபுரத்தை சேர்ந்த வாலிபர் காதலித்து வந்தார். இந்த காதல் விவகாரம் இளம்பெண்ணின் சகோதரனுக்கு தெரிய வந்தது. இதையடுத்து இளம்பெண்ணின் சகோதரன், அந்த வாலிபரை சந்தித்து எச்சரிக்கை விடுத்தார். இதுதொடர்பாக அவர்கள் இடையே முன்விரோதம் ஏற்பட்டு அடிக்கடி மோதலில் ஈடுபட்டு வந்தனர். இந்தநிலையில் சம்பவத்தன்று இளம்பெண்ணின் சகோதரன், தன்னுடன் சில வாலிபர்களை அழைத்து கொண்டு மாதவபுரத்திற்கு சென்றார். அங்கு இளம்பெண்ணின் காதலனை தாக்குவதற்காக அவரது வீட்டின் முன்பு நின்று வெளியே வருமாறு அழைத்தனர்.

அவர் வெளியே வந்து பார்த்த போது, வாலிபர்கள் ஆயுதங்களுடன் நிற்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார். அவர்களிடம் திரும்பி செல்லும்படி எச்சரித்தார். ஆனால், அவர்கள் திரும்பி செல்ல மறுத்து தொடர்ந்து வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

அப்போது காதலன், வீட்டின் முன்பு நின்ற வாலிபர்களிடம் ‘வெடிகுண்டு வீசி கொன்றுவிடுவேன்’ என மிரட்டினார். அத்துடன் வீட்டுக்குள் சென்று நாட்டு வெடிகுண்டு போன்ற ஒரு பொருளை எடுத்து வந்து வாலிபர்கள் மீது வீசினார். அது பயங்கர சத்தத்துடன் வெடித்து சிதறியது.

உடனே, அங்கு நின்ற வாலிபர்கள் நாட்டு வெடிகுண்டு வெடித்தாக நினைத்து நாலாப்புறமாக சிதறி ஓடினர். இதற்கிடையே காதலனுக்கு ஆதரவாக அவரது நண்பர்கள் அங்கு கூடினர். அவர்கள், இளம்பெண்ணின் சகோதரனையும், அவருடன் வந்தவர்களையும் விரட்டி அடித்தனர்.

இதுகுறித்து கன்னியாகுமரி போலீசுக்கு தகவல் கொடுக்கப்பட்டது. போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று விசாரணை நடத்தினர். அப்போது, காதலன் தீபாவளிக்காக வாங்கி வைத்திருந்த பட்டாசை வெடிகுண்டு என ஏமாற்றி வீசியது தெரிய வந்தது. இதையடுத்து போலீசார் அவரை எச்சரித்து அனுப்பி வைத்தனர்.

காதல் தகராறு மோதலில் தீபாவளி பட்டாசை வீசிவிட்டு வெடிகுண்டு என மிரட்டிய சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.

மேலும் செய்திகள்