பெற்றோருக்கு தெரியாமல் திருமணம்: பாதுகாப்பு கேட்டு கைக்குழந்தையுடன் மனு கொடுத்த தம்பதி

பெற்றோருக்கு தெரியாமல் திருமணம் செய்து குழந்தை பெற்ற தம்பதி, பாதுகாப்பு கேட்டு தேனி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் மனு அளித்தனர்.;

Update: 2018-10-27 23:15 GMT
தேனி,

கம்பம் அருகே உள்ள நாராயணத்தேவன்பட்டியை சேர்ந்தவர் அபிநயா (வயது 22). நேற்று இவர், தனது காதல் கணவர் ரோகன்குமார் மற்றும் கைக்குழந்தையுடன் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்துக்கு வந்தார். அவர்களுடன், ஆதித்தமிழர் பேரவை நிர்வாகிகளும் வந்திருந்தனர். பின்னர் போலீஸ் சூப்பிரண்டு பாஸ்கரனிடம் அபிநயா ஒரு மனு அளித்தார். அதில் அவர் கூறியிருப்பதாவது:-

நானும், கம்பத்தை சேர்ந்த ரோகன்குமாரும் காதலித்தோம். ரோகன்குமார் கோவையில் என்ஜினீயரிங் படித்து வந்தார். நான், கோவையில் உள்ள ஒரு கலைக்கல்லூரியில் படித்து வந்தேன். நாங்கள் இருவரும் காதலித்து கோவிலில் வைத்து திருமணம் செய்து கொண்டோம்.

கடந்த 10 மாதங்களுக்கு முன்பு நான் கர்ப்பம் அடைந்தேன். இதை எங்கள் பெற்றோருக்கு தெரியப்படுத்தவில்லை. நாங்கள் இருவரும் வெவ்வேறு சமுதாயத்தை சேர்ந்தவர்கள். வீட்டுக்கு தெரிந்தால் ஏற்க மறுத்து கொலை செய்து விடுவார்களோ என்று பயந்தோம். எனக்கு கடந்த 23-ந்தேதி சென்னையில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் ஆண் குழந்தை பிறந்தது. இதை எங்களின் பெற்றோருக்கு தெரியப்படுத்தினோம். முதலில் அவர்கள் நம்பவில்லை. பின்னர், எனது குடும்பத்தினர் மருத்துவமனைக்கு வந்து பிரச்சினை செய்தனர். தற்போது எங்களுக்கு மிரட்டல் வருகிறது.

எங்கள் உயிருக்கு உத்தரவாதம் இல்லை. எனவே, எனக்கும், எனது கணவர், குழந்தைக்கும் பாதுகாப்பு வழங்க வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன்.

இவ்வாறு அவர் கூறியிருந்தார்.

மேலும் இதுகுறித்து அபிநயா கூறுகையில், ‘என்ஜினீயரிங் படித்து முடித்தபின்னர் எனது கணவருக்கு சென்னை விமான நிலையத்தில் வேலை கிடைத்தது.

வீட்டுக்கு தெரியாமல் திருமணம் செய்த நாங்கள் சென்னையில் குடும்பம் நடத்தி வந்தோம். தற்போது என் கணவரின் குடும்பத்தினர் எங்களை ஏற்றுக் கொண்டனர்’ என்றார்.

மேலும் செய்திகள்