தூத்துக்குடி கலெக்டர் அலுவலகத்தில் புதிய சுற்றுச்சுவர் அமைச்சர் கடம்பூர் ராஜூ திறந்து வைத்தார்
தூத்துக்குடி கலெக்டர் அலுவலகத்தில் ரூ.60 லட்சம் மதிப்பீட்டில் புதிதாக கட்டப்பட்ட சுற்றுச்சுவரை அமைச்சர் கடம்பூர் ராஜூ திறந்து வைத்தார்.;
தூத்துக்குடி,
தூத்துக்குடி கலெக்டர் அலுவலகத்தில் ரூ.60 லட்சம் மதிப்பீட்டில் புதிதாக கட்டப்பட்ட சுற்றுச்சுவரை அமைச்சர் கடம்பூர் ராஜூ திறந்து வைத்தார்.
சுற்றுச்சுவர்
தூத்துக்குடி மாவட்ட கலெக்டர் அலுவலக வளாகத்தின் சுற்றுச்சுவர் திறப்பு விழா நடந்தது. கலெக்டர் சந்தீப் நந்தூரி தலைமை தாங்கினார். இந்த விழாவில், செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர் கடம்பூர் ராஜூ கலந்து கொண்டு, கலெக்டர் அலுவலக வளாக சுற்றுச்சுவரை திறந்து வைத்தார்.
மாவட்ட கலெக்டர் அலுவலக வளாக சுற்றுச்சுவரானது 550 மீட்டர் நீளத்திலும், 6 அடி உயரத்திலும் கட்டப்பட்டு உள்ளது.
மதில் சுவரின் மீது 2 அடி உயரத்தில் கிரில் கம்பியும், 3 பெரிய மற்றும் ஒரு சிறிய நுழைவு வாயிலும் ரூ.60 லட்சம் மதிப்பீட்டில் ராம்கோ சிமெண்ட்ஸ் நிறுவனம், ராமசாமி ராஜா நகர் நிர்வாகத்தால் கட்டி நன்கொடையாக வழங்கப்பட்டுள்ளது.
யார்-யார்?
இந்த நிகழ்ச்சியில் மாநகராட்சி ஆணையாளர் ஆல்பிஜான் வர்க்கீஸ், மாவட்ட வருவாய் அலுவலர் வீரப்பன், உதவி கலெக்டர் (பயிற்சி) அனு, முன்னாள் மத்திய மந்திரி கடம்பூர் ஜனார்த்தனன், முன்னாள் அமைச்சர் சி.த.செல்லப்பாண்டியன், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் தனபதி, மாவட்ட கலெக்டரின் நேர்முக உதவியாளர் (பொது) தியாகராஜன், ராம்கோ சிமெண்ட்ஸ் நிறுவனத்தின் நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.