தினகரனுக்கு ஆதரவு தெரிவிக்கும் தகுதி நீக்க எம்.எல்.ஏ.க்கள் மேல்முறையீடு செய்வது தேவையற்றது அமைச்சர் கடம்பூர் ராஜூ பேட்டி

தினகரனுக்கு ஆதரவு தெரிவிக்கும் தகுதி நீக்க எம்.எல்.ஏ.க்கள் மேல் முறையீடு செய்வது தேவையற்றது என அமைச்சர் கடம்பூர் ராஜூ கூறினார்.

Update: 2018-10-27 21:30 GMT
தூத்துக்குடி, 

தினகரனுக்கு ஆதரவு தெரிவிக்கும் தகுதி நீக்க எம்.எல்.ஏ.க்கள் மேல் முறையீடு செய்வது தேவையற்றது என அமைச்சர் கடம்பூர் ராஜூ கூறினார்.

இதுகுறித்து அவர் தூத்துக்குடியில் நிருபர்களிடம் கூறியதாவது;-

மேல்முறையீடு தேவையற்றது

தினகரனுக்கு ஆதரவு தெரிவிக்கும் தகுதி நீக்க எம்.எல்.ஏ.க்கள் விவகாரத்தில் நீதிமன்ற தீர்ப்பில் தகுதி நீக்கம் செல்லும் என்ற அறிவிப்பு வந்து உள்ளது. அவர்கள் எம்.எல்.ஏ.க்கள் என்ற நிலையில் இல்லை. முன்னாள் எம்.எல்.ஏ.க்கள் என்றும் சொல்ல முடியாது. அவர்கள் விருப்பப்படி ஆலோசனை கூட்டம் நடத்தலாம். அதற்கு யாரும் தடை விதிக்க முடியாது.

ஒரு கட்சியின் மூலம் தேர்வு செய்யப்பட்ட சட்டமன்ற உறுப்பினர்கள் கட்சிக்கு எதிரான நிலைபாட்டை எடுக்கின்ற நேரத்தில், அவர்களை தகுதி நீக்கம் செய்ய கட்சி கொறடாவிற்கும், சட்ட பேரவை தலைவருக்கும் அதிகாரம் உண்டு.

இந்த வழக்கை உச்சநீதிமன்ற வழிகாட்டுதலின்படி நீதிபதி விசாரித்து தீர்ப்பு வழங்கி உள்ளார். இதில் மேல்முறையீடு செய்வது தேவை இல்லாதது. டி.டி.வி.தினகரனுக்கு ஆதரவாக இருக்கும் சில எம்.எல்.ஏ.க்கள் தொடர்ந்து அதே நிலைபாட்டில் இருந்தால் அவர்களை தகுதி நீக்கம் செய்ய கட்சியின் கொறடா, முதல்-அமைச்சர், துணை முதல்-அமைச்சர் ஆகியோர் ஒருங்கிணைந்து முடிவு செய்வார்கள்.

இடைத்தேர்தல்

காலியாக உள்ள சட்டமன்ற தொகுதிகளுக்கு 6 மாதங்களுக்குள் தேர்தல் நடத்த தேர்தல் ஆணையம் தெரிவித்து உள்ளது. நாங்கள் எப்போது தேர்தல் நடந்தாலும் தயாராக உள்ளோம். தனியாக தேர்தல் வந்தாலும் சரி, நாடாளுமன்ற தேர்தலுடன் சேர்ந்து வந்தாலும் சரி அ.தி.மு.க. நிச்சயமாக தேர்தலை எதிர்கொள்ளும். 20 வேட்பாளர்களும் வெற்றி பெறுவார்கள்.

தேர்தல் நெருங்கும் நேரத்தில் அனைத்து கட்சிகள் செயற்குழு பொதுக்குழுக்களை கூட்டி கூட்டணி பற்றி முடிவு எடுக்கப்படும்.

உள்ளாட்சி தேர்தலை நடத்த நாங்கள் தயாராக இருக்கிறோம். நீதிமன்ற உத்தரவு படி தொகுதி வரையரை செய்யப்பட்டு வருகிறது. 90 சதவீதம் முடிந்துவிட்டது. முழுமையாக முடித்துவிட்ட பின்னர் தேர்தலை நடத்த வேண்டும் என்பதற்காக தான் தற்போது தேர்தல் நடத்தவில்லை. என்றும் நாங்கள் தேர்தலை சந்திக்க பயப்பட்டதில்லை.

இவ்வாறு அவர் கூறினார்.

மேலும் செய்திகள்