தூத்துக்குடி மாநகராட்சி பகுதியில் டெங்கு பாதிப்பு உள்ள இடங்களை அறிய செல்போன் செயலி ஆணையாளர் ஆல்பிஜான் வர்க்கீஸ் தகவல்

தூத்துக்குடி மாநகராட்சி பகுதியில் டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டவர்கள் இருக்கும் இடம் குறித்து அறிய புதிதாக செல்போன் செயலி.

Update: 2018-10-27 21:30 GMT
தூத்துக்குடி, 

தூத்துக்குடி மாநகராட்சி பகுதியில் டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டவர்கள் இருக்கும் இடம் குறித்து அறிய புதிதாக செல்போன் செயலி அறிமுகப்படுத்தப்பட்டு உள்ளதாக மாநகராட்சி ஆணையாளர் ஆல்பிஜான் வர்க்கீஸ் தெரிவித்து உள்ளார்.

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறிஇருப்பதாவது:-

செல்போன் செயலி

தூத்துக்குடி மாநகராட்சியில் கொசுப்புழு உற்பத்தியை தடுக்கும் பணியில் 450 பேர் பணியாற்றி வருகிறார்கள். அவர்கள் சுழற்சி அடிப்படையில், ஒவ்வொரு வீட்டிற்கும் வாரத்திற்கு ஒருமுறை சென்று வீட்டின் உட்புறம் மற்றும் வெளிப்புறப் பகுதிகளில் கொசுப்புழு உற்பத்தியாவதற்கான காரணிகளை கண்டறியும் பணியினை மேற்கொள்வதுடன், காரணிகள் கண்டறியப்படின் அதனை உடனடியாக அழிப்பதற்கான நடவடிக்கையினை மேற்கொண்டு வருகிறார்கள். அவ்வாறு வீடுகளுக்கு செல்லும் நிலையில் கட்டிடங்கள் பூட்டப்பட்டிருந்தால் அடுத்த நாள் மீண்டும் சென்று கள ஆய்வு மேற்கொள்வர்.

இந்த நிலையில் டெங்கு கொசுப்புழு உற்பத்தியை தடுக்கும் பணியாளர்களின் பணியினை கண்காணிக்கும் வகையில், தூத்துக்குடி மாநகராட்சி சார்பில் கியூ.ஆர். கோர்டு மூலம் ‘மஸ்கிட்டோ மப்பேர்‘ என்ற செல்போன் செயலி அறிமுகப்படுத்தப்பட்டு உள்ளது. அதன்படி மாநகராட்சியின் அனைத்து வீடுகளின் சுவர்களிலும் கியூ.ஆர்.கோர்டு ஸ்டிக்கர் ஒட்டப்படும்.

கண்காணிப்பு

இதன் மூலம் பணியாளர்கள் ஒவ்வொரு வீடுகளுக்கு செல்லும் போது டெங்கு காய்ச்சல் பாதிக்கப்பட்டோர் விவரம், பாதிப்புக்குள்ளான குடியிருப்பு விவரங்கள் ஆகியவை கண்டறியப்படும் வகையில் இந்த செயலி உருவாக்கப்பட்டு உள்ளது.

இதனால் கூகுள் வரைபடத்தில் கொசுப்புழு உற்பத்தி அதிகமாக இருக்கும் இடங்கள், பாதிக்கப்பட்ட நபர், நோய் பாதிக்கப்பட்டவர் இருப்பிடம் போன்ற விவரங்கள் உடனுக்குடன் கண்டறியப்பட்டு முற்றிலும் அழிப்பதற்கும் மற்றும் பணியாளர்கள் முறையாக வீடுகளுக்குச் செல்வதை மாநகராட்சி உயர் அலுவலர்களால் கண்காணிக்கும் வகையில் அமைக்கப்பட்டுள்ளது. இந்த திட்டம் தமிழ்நாட்டில் முதல் முறையாக தூத்துக்குடி மாநகராட்சியில் அறிமுகப்படுத்தப்பட்டு உள்ளது.

இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.

மேலும் செய்திகள்