தீபாவளி பொருட்கள் வாங்குவதற்காக செஞ்சியில் அலைமோதும் பொதுமக்கள் கூட்டம் கோபுரம் அமைத்து போலீசார் கண்காணிப்பு
தீபாவளி பண்டிகை பொருட்கள் வாங்குவதற்காக செஞ்சியில் பொதுமக்கள் கூட்டம் அலைமோதுகிறது. குற்றச்செயல்களை தடுக்க கோபுரம் அமைத்து போலீசார் கண்காணித்து வருகிறார்கள்.;
அடுத்த மாதம்(நவம்பர்) 6-ந் தேதி தீபாவளி பண்டிகை கொண்டாடப்படுகிறது. இதற்கு தேவையான பொருட்களை வாங்கவும், புதிய ஆடைகளை வாங்கவும் பொதுமக்கள் ஆர்வம் காட்டத்தொடங்கி விட்டனர். இதற்காக கிராம மக்கள் நகரங்களை தேடிச்செல்கிறார்கள். அங்கு பட்டாசு, ஆடைகள், பொருட்களை ஆர்வமுடன் வாங்கிச்செல்கிறார்கள்.
இதனால் நகரங்களில் பொதுமக்கள் கூட்டம் அலைமோதுகிறது. அந்த வகையில் தீபாவளி பண்டிகை நெருங்கி வருவதால் செஞ்சிக்கு பொதுமக்கள் வரத்து நாளுக்கு, நாள் அதிகரித்துக்கொண்டே செல்கிறது.
அலைமோதும் பொதுமக்கள் கூட்டத்தில் ஏற்படும் நெரிசலை பயன்படுத்தி சிலர் நகை பறிப்பில் ஈடுபட வாய்ப்பு உள்ளது. எனவே இதுபோன்ற குற்றச்செயல்களை தடுக்கும் வகையில் செஞ்சி பஸ் நிலையத்தில் காவல்துறை சார்பில் கண்காணிப்பு கோபுரம் அமைக்கப்பட்டுள்ளது.
இதில் சுழற்சி முறையில் போலீசார் பணியில் அமர்த்தப்பட்டு, கூட்டத்தை கண்காணித்த வருகிறார்கள். மேலும் ஒலிபெருக்கி மூலம் அவ்வப்போது பொதுமக்களுக்கு அறிவுரையும் கூறுகிறார்கள். அதுமட்டுமின்றி போலீசார் சாதாரண உடை அணிந்து, மக்களோடு மக்களாக சென்றும் கண்காணிப்பில் ஈடுபட்டு வருகிறார்கள்.