பள்ளிபாளையம் ஊராட்சி ஒன்றியத்தில் ரூ.3.97 கோடியில் வளர்ச்சி திட்டப்பணிகள்

பள்ளிபாளையம் ஊராட்சி ஒன்றியத்தில் ரூ.3.97 கோடியில் வளர்ச்சி திட்டப்பணிகளுக்கு அமைச்சர் தங்கமணி அடிக்கல் நாட்டினார்.

Update: 2018-10-27 22:30 GMT
பள்ளிபாளையம்,

பள்ளிபாளையம் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட பல்வேறு பகுதிகளில் தமிழ்நாடு ஊரக சாலைகள் மேம்பாடு திட்டம் மற்றும் பொது நிதி திட்டங்களின் கீழ் ரூ.3.97 கோடி மதிப்பீட்டில் வளர்ச்சித்திட்டப்பணிகளுக்கு மின்சாரம் மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத்துறை அமைச்சர் பி.தங்கமணி பூமி பூஜையிட்டு அடிக்கல் நாட்டினார்.

முதலாவதாக பள்ளிபாளையம் ஊராட்சி ஒன்றியம் காடச்சநல்லூர் ஊராட்சி ஜெ.ஜெ.நகர் பகுதியில் பொது நிதி திட்டத்தின் கீழ் ரூ.12.64 லட்சம் மதிப்பீட்டில் 60 ஆயிரம் லிட்டர் கொள்ளளவு கொண்ட மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி கட்டும் பணி மற்றும் ஆழ்துளை கிணறு அமைத்து மின்விசை இறைப்பான் பொருத்தி பைப்லைன் அமைத்தல் பணியினையும்,    தமிழ்நாடு ஊரக சாலைகள் மேம்பாடு திட்டத்தின் கீழ் ரூ.21.04 லட்சம் மதிப்பீட்டில் அண்ணாநகர் தார் சாலை முதல் பெருமாபாளையம் - வெள்ளையங்காடு தார் சாலை வழியாக கருந்தேவம்பாளையம் வரை தார் சாலை மேம்பாடு செய்தல் பணியினையும் அமைச்சர் தொடங்கி வைத்தார்.

மோளக்கவுண்டம்பாளையம் முதல் வெள்ளப்பாறை வரை சாலை மேம்பாடு செய்தல் பணியினையும், ரூ.33.99 லட்சம் மதிப்பீட்டில் எளையாம்பாளையம் முதல் ராசாக்கோவில் எல்லை வரை மற்றும் ராசாக்கோவில் முதல் களியனுார் தார் சாலை வரை 1.200 கி.மீ நீளத்திற்கு தார்சாலை மேம்பாடு செய்தல் பணியினையும், ரூ.63.41 லட்சம் மதிப்பீட்டில் கரட்டாங்காடு மணக்காடு முதல் செங்காடு வரை 1.500 கி.மீ நீளத்திற்கு சாலை மேம்பாடு செய்தல் பணியினையும் என மொத்தம் ரூ.3.97 கோடி மதிப்பீட்டில் புதிய வளர்ச்சி திட்டப்பணிகளுக்கு அடிக்கல் நாட்டினார்.

முன்னதாக ஆலாம்பாளையம் பேரூராட்சியில் திடக் கழிவு மேலாண்மை திட்டத்தின் கீழ் குப்பை சேகரிக்கும் சிறியரக புதிய வாகனத்தை அமைச்சர் பி.தங்கமணி கொடியசைத்து தொடங்கி வைத்தார்.

இந்த நிகழ்ச்சிகளில் கலெக்டர் ஆசியா மரியம், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் சி.மாலதி, திருச்செங்கோடு உதவி கலெக்டர் பாஸ்கரன், பள்ளிபாளையம் ஊராட்சி ஒன்றியக்குழு முன்னாள் தலைவர் எஸ்.செந்தில், மாவட்ட கூட்டுறவு ஒன்றியத்தலைவர் டி.கே.சுப்பிரமணியம், பள்ளிபாளையம் நகர்மன்ற முன்னாள் தலைவர் வெள்ளியங்கிரி, தாசில்தார் ரகுநாதன், வட்டார வளர்ச்சி அலுவலர்கள் சிவராம கிருஷ்ணராஜ் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

மேலும் செய்திகள்