பக்தர்களுக்கு அனைத்து வசதிகளும் செய்ய ஏற்பாடு: திருச்செந்தூர் கந்தசஷ்டி விழாவில் 3 ஆயிரம் போலீசார் பாதுகாப்பு
திருச்செந்தூர் கந்தசஷ்டி திருவிழாவில் 3 ஆயிரம் போலீசாரை பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்துவது என்று ஆலோசனை கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது.
திருச்செந்தூர்,
திருச்செந்தூர் கந்தசஷ்டி திருவிழாவில் 3 ஆயிரம் போலீசாரை பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்துவது என்று ஆலோசனை கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது.
ஆலோசனை கூட்டம்
திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் கந்தசஷ்டி திருவிழா வருகிற 8-ந் தேதி (வியாழக்கிழமை) தொடங்கி, 12 நாட்கள் நடைபெற உள்ளது. 6-ம் திருநாளான 13-ந் தேதி (செவ்வாய்க்கிழமை) மாலையில் விழாவின் சிகர நிகழ்ச்சியான சூரசம்ஹாரம் நடக்கிறது. விழாவில் பல லட்சம் பக்தர்கள் கலந்து கொண்டு விரதம் இருந்து சாமி தரிசனம் செய்வார்கள்.
இதனை முன்னிட்டு, திருவிழா முன்னேற்பாடுகள் குறித்த ஆலோசனை கூட்டம் கோவில் வளாகத்தில் உள்ள கோவிந்தம்மாள் ஆதித்தனார் திருமண மண்டபத்தில் நேற்று நடந்தது.
இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேவூர் ராமச்சந்திரன், செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர் கடம்பூர் ராஜூ ஆகியோர் தலைமை தாங்கினர். மாவட்ட கலெக்டர் சந்தீப் நந்தூரி, போலீஸ் சூப்பிரண்டு முரளி ரம்பா, இந்து சமய அறநிலையத்துறை ஆணையர் ராமச்சந்திரன், கோவில் தக்கார் இரா.கண்ணன் ஆதித்தன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
அடிப்படை வசதிகள்
இந்த கூட்டத்தில், விழா நாட்களில் கோவிலுக்கு தினமும் 5 லட்சம் லிட்டர் குடிநீர் வினியோகம் செய்ய வேண்டும். திருச்செந்தூர் நகர் முழுவதும் தற்காலிக குடிநீர் பந்தல் அமைத்து பக்தர்களுக்கு குடிநீர் வழங்க வேண்டும். தற்காலிக பஸ் நிலையங்களில் குடிநீர், மின்விளக்கு வசதி செய்ய வேண்டும். நகரில் சேரும் குப்பைகளை உடனுக்குடன் அகற்ற வேண்டும். கோவில் வளாகம் மற்றும் நகர் முழுவதும் கொசு ஒழிப்பு மருந்து தெளிக்க வேண்டும்.
கோவில் வளாகம், குரும்பூர் குரங்கண்தட்டு நீரேற்று நிலையம், தெப்பக்குளம் நீரேற்று நிலையம் உள்ளிட்ட இடங்களில் தடையற்ற மின்சாரம் வினியோகம் செய்ய வேண்டும்.
அனைத்து வழித்தடங்களிலும் கூடுதல் பஸ்களை இயக்க வேண்டும். சூரசம்ஹார தினத்தன்று திருச்செந்தூரில் இருந்து சென்னை, நெல்லைக்கு சிறப்பு ரெயில்களை இயக்க தென்னக ரெயில்வேயிடம் வலியுறுத்துவது.
3 ஆயிரம் போலீசார் பாதுகாப்பு
கடலில் புனித நீராடும் பக்தர்கள் ஆழமான பகுதிக்கு செல்லாத வகையில், கயிறு கட்டி மிதவைகளை மிதக்க விட வேண்டும். கடலில் படகுகளில் தீயணைப்பு துறையினர், மீன்வளத்துறையினர் கண்காணிப்பு பணியில் ஈடுபட வேண்டும். கூடுதலாக தற்காலிக செல்போன் கோபுரங்களை அமைக்க வேண்டும்.
24 மணி நேரமும் மருத்துவ குழுவினர் தயார் நிலையில் இருக்க வேண்டும். தீயணைப்பு வாகனங்கள், ஆம்புலன்சுகள் தயார் நிலையில் இருக்க வேண்டும். 3 ஆயிரம் போலீசாரை பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்துவது உள்ளிட்ட பல்வேறு முடிவுகள் எடுக்கப்பட்டன.
கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் வீரப்பன், உதவி கலெக்டர்கள் அனு (பயிற்சி), கோவிந்தராசு (திருச்செந்தூர்), துணை போலீஸ் சூப்பிரண்டு (பொறுப்பு) முகேஷ் ஜெயகுமார், ஆவின் சேர்மன் சின்னத்துரை, கோவில் இணை ஆணையர் பாரதி, ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் தனபதி, தாசில்தார் தில்லைப்பாண்டி, நகர பஞ்சாயத்துகளின் உதவி இயக்குனர் மாஹின் அபுபக்கர், போலீஸ் இன்ஸ்பெக்டர்கள் ரகுராஜன், ஷீஜாராணி, தீயணைப்பு நிலைய அலுவலர் நட்டார் ஆனந்தி உள்பட பலர் கலந்து கொண்டனர்.